பழமையான பங்குனி உத்திர விழா

சம்பந்தர் எலும்புகளும் சாம்பலும் அடங்கிய பொற்குடத்தை எடுத்து கபாலீஸ்வரர் கோவிலில் வைத்தார். அன்று கபாலீஸ்வரர் கோவில் உற்சவதினத்தில் ஒன்பதாம் நாள், பங்குனி உத்திர திருநாள் ஆகும்.

Update: 2017-04-05 10:26 GMT
ங்குனி உத்திரத் திருநாள் மிகவும் பழமையானது. அதனை திருஞான           சம்பந்தரின் தேவாரப்பாடல் வாயிலாகவே அறியலாம். சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்ற வணிகர் இருந்தார். அளவு கடந்த சிவ பக்தி கொண்ட அவருக்கு பூம்பாவை என்ற மகள் இருந்தாள். திருஞான சம்பந்தரின் புகழைக்கேட்ட சிவநேசர், தனது மகளை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணினார்.

இதற்கிடையில் நந்தவனத்தில் பூஞ்செடிகளுக்கு நடுவே நின்று பூக்களை பறித்துக் கொண்டிருந்த பூம்பாவையை, அங்கிருந்த பாம்பு ஒன்று தீண்டியது. இதில் பூம்பாவை இறந்து விட்டாள். இதனால் சிவநேசர் மனம் கலங்கினார்.

மகளின் உடலை தகனம் செய்து பெற்ற சாம்பலையும், எலும்பையும் சேர்த்து பொற்குடத்தில் இட்டு வைத்து இருந்தார். அவர் எதிர்பார்த்த படி திருஞானசம்பந்தர் அவ்வூருக்கு வந்தார். மயிலாப்பூரில் பூம்பாவை இறந்த செய்தியையும் சிவநேசர், எலும்பையும் சாம்பலையும் பொற்குடத்தில் இட்டு வைத்து இருப்பதையும் அறிந்தார். சிவநேசரும் சம்பந்தரை சந்தித்தார். பின்னர் சம்பந்தர் எலும்புகளும் சாம்பலும் அடங்கிய பொற்குடத்தை எடுத்து கபாலீஸ்வரர் கோவிலில் வைத்தார். அன்று கபாலீஸ்வரர் கோவில் உற்சவதினத்தில் ஒன்பதாம் நாள், பங்குனி உத்திர திருநாள் ஆகும். இந்நாளின் மகத்துவம்பற்றி சம்பந்தர் தேவார பதிகத்தில் பூம்பாவையை பற்றி,

‘மலிவிழா வீதிமட நல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான்
கபாலீச்சரம்மர்ந்தான் பலிவிழாப் பாடல்செய்
பங்குனியுத்தரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்’


என்று தொடங்கும் திருப்பதிகத்தை பாடினார்.

அப்போது பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வந்தாள். அவளை மணந்து கொள்ளும்படி சிவநேசர், சம்பந்தரிடம் வேண்டினார். ஆனால் உயிர் கொடுத்தவர் தந்தைக்கு சமம் என்பதால் அவரை திருமணம் செய்ய சம்பந்தர் மறுத்து விட்டார். இதன் மூலம் சம்பந்தர் காலத்திலும், அதாவது கி.பி. 7,8–ம் நூற்றாண்டிலும் பங்குனி உத்திரவிழா சிறப்புற்று விளங்கியது தெரிய வருகிறது.

சுந்தரமூர்த்தி நாயனாரும் அவருடைய துணைவியார் பரவை நாச்சியாரும் பங்குனி உத்திர விழாவை சிறப்பாக கொண்டாடியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்