மரமாக மாறிய குபேரனின் பிள்ளைகள்

செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் எப்படி கேளிக்கைகளில் திளைத்திருப்பார்களோ, அதே போலவே குபேரனின் பிள்ளைகளான நளகூவரனும், மணிக்கிரீவனும் கூட மது, மாதுவில் மயங்கிக் கிடந்தனர்.

Update: 2017-08-08 10:30 GMT
வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்த கண்ணனை, அவனது தாய் யசோதை உரலில் கட்டிப் போட்டாள். மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், அங்கிருந்த இரண்டு மரங்களைக் கண்டார். அப்போது அந்த மரங்கள் அவரிடம் பேசின. ‘இறைவா! நாங்கள் நளகூவரன், மணிக்கிரீவன். நாங்கள் இருவரும் குபேரனின் மைந்தர்கள் என்று தாங்கள் மரமாக மாறிய கதையைக் கூறத் தொடங்கினர்.

செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் எப்படி கேளிக்கைகளில் திளைத்திருப்பார்களோ, அதே போலவே குபேரனின் பிள்ளைகளான நளகூவரனும், மணிக்கிரீவனும் கூட மது, மாதுவில் மயங்கிக் கிடந்தனர். ஒரு முறை நாரதர் அந்த வழியாக வந்த போது அவரை கண்டு கொள்ளாமல், இருவரும் பெண்களோடு மயக்க நிலையில் இருந்தனர். இதனால் கோபம் கொண்ட நாரதர், அவர்கள் இருவரையும் மரங்களாக மாறும்படி சாபம் கொடுத்தார். மேலும் முழு முதற் கடவுளை நேரில் கண்டால்தான் விமோசனம் கிடைக்கும் என்றும் கூறினார்.

அந்த நல்வாய்ப்பு இப்போதுதான் அவர்களுக்கு கிடைத்தது. உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், அந்த இரண்டு மரங்களுக்கு இடையே புகுந்து வெளியே வந்தார். மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதில் இருந்து நளகூவரனும், மணிக்கிரீவனும் அழகான தேவர்களாக உருப்பெற்று வந்தனர். அவர்கள் கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து சிரம் தாழ்ந்து பணிந்தனர். பின் தேவலோகம் சென்றனர். 

மேலும் செய்திகள்