திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சண்முகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை

திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று சண்முகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.

Update: 2017-10-21 23:18 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக சண்முகர் சன்னதியில் தினமும் இரு வேளை சண்முகார்ச்சனை நடைபெற்று வருகிறது. ஒரு வேளைக்கு 1008 வீதம் 6 நாளைக்கும் சாமிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யப்படுகிறது.

அதன்படி நேற்று ஒரே நேரத்தில் ஆறுமுகத்திற்கும் (சண்முகருக்கு) ஆறு சிவாச்சாரியார்கள் நின்று 6 வகையான பூக்களால் அர்ச்சனை செய்தனர். இதேபோல வள்ளி மற்றும் தெய்வானை சமேத சண்முகருக்கு சர்க்கரை, புளியோதரை, கற்கண்டு, தேங்காய், எலுமிச்சை சாதங்களை சாமிக்கு படைத்து சமகாலத்தில் மகாதீப ஆராதனை நடந்தது.

பக்தி பரவசமிக்க இந்த காட்சியை விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 24-ந்தேதி வேல் வாங்குதலும் 25-ந்தேதி சூரசம்ஹாரமும், 26-ந்தேதி காலையில் சட்டத் தேர் பவனியும், மாலையில் பாவாடை தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்