எடப்பாடியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியினை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் மூக்கரை நரசிம்ம பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2025-12-30 12:47 IST

சேலம் மாவட்டம் எடப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. இன்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி, தொடர்ந்து யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜை நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பசு, கன்றுடன் சொர்க்கவாசல் முன்பு நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து மூக்கரை நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூக்கரை நரசிம்ம பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சொர்க்க வாசல் முகப்பில் உள்ள பல்லி உருவங்களை வணங்கிய பக்தர்கள் சொர்க்கவாசல் படிகளை தொட்டு வணங்கினர்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது, திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியினை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் மூக்கரை நரசிம்ம பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் பழைய எடப்பாடி பகுதியில் உள்ள சென்றாய பெருமாள் திருக்கோவில், வெள்ளைக்கரடு மலை மீது அமைந்துள்ள திம்மராய பெருமாள் சன்னதி, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள மலை மாட்டுப் பெருமாள் மலைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் சன்னதிகளில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்