பக்தனை கரை சேர்த்த இறைவன்

நாகை மாவட்டம் விளநகரில் உள்ளது ‘துறை காட்டும் வள்ளலார் ஆலயம்.’ இத்தலத்தின் தல புராணம் சொல்லும் கருத்து என்ன?.

Update: 2017-11-21 02:15 GMT
நாகை மாவட்டம் விளநகரில் உள்ளது ‘துறை காட்டும் வள்ளலார் ஆலயம்.’ இத்தலத்தின் தல புராணம் சொல்லும் கருத்து என்ன?.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் துறைகாட்டும் வள்ளலார் என்பதே. இறைவி பெயர் வேய்த்தோளியம்மன். காம்பனதோளி என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு.

‘விழல்’ என்பது ஒருவகைப் புல். இந்தப் புல் நிறைந்த இந்த ஊர் ‘விழல் நகர்’ என அழைக்கப்பட்டு, பின்னர் சற்றே மருவி ‘விளநகர்’ ஆனதாக கூறுகிறார்கள். இத்தலத்தின் தல விருட்சம், விழல் புல் தான். ஆலய தீர்த்தம் காவிரி.

ஆலயம் ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான ஐந்தடுக்கு ராஜகோபுரத்தை அடுத்து, பலி பீடம், நந்தி, ஆஸ்தான மண்டபம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தின் வடபுறம் அம்பாள் சன்னிதி உள்ளது. இத்தல அம்மன் வேய்த்தோளியம்மன் தென்புறம் நோக்கி அருள் பாலிக்கிறார். அம்மன் சன்னிதிக்கு எதிரே கருவறையில் இறைவன் கிழக்கு திசை நோக்கி லிங்கத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார்.

தேவ கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே திருமால், வடக்கே பிரம்மா, துர்க்கை ஆகியோரது திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தின் மேல்புறம் விநாயகர், சோமாஸ்   சுந்தர், ஆறுமுகர், நால்வர், கஜலட்சுமி,  வடபுறம் நடராஜர், கிழக்கே நவக்கிரகங்கள், சனீஸ் வரன், பைரவர், சூரியன் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.

தல வரலாறு

அருள்வித்தன் என்ற பக்தன் இத்தலத்து இறைவன் மேல் அளவிலா பக்தி கொண்டிருந்தான். தினசரி இறைவனுக்குத் தேவையான மலர்களைக் கொண்டு வந்து கோவிலில் சேர்ப்பதையே, தன் கடமையாகக் கொண்டிருந்தான். எந்த இடையூறு வந்தாலும் தன் கடமையிலிருந்து அவன் தவறுவதே இல்லை. அந்த பக்தனின் தொண்டினை உலகம் அறியச் செய்யவும், சிவபக்தியின் மேன்மையை அனைவரும் உணரவும் திருவுளங்கொண்டார் இறைவன்.

ஒரு நாள் அருள்வித்தன் பூக்கூடையுடன் ஆற்றைக் கடந்து கொண்டிருந்த போது இறைவன் ஆற்று நீரைப் பெருகச் செய்தார். ஆற்றுநீர் இடுப்பளவு, மார்பளவு, கழுத்தளவு என உயர்ந்து கொண்டே வந்தது. வாய்ப் பகுதி வரை தண்ணீர் வந்ததும், அருள்வித்தனால் பூக்கூடையை இரு கரங்களிலும் சுமந்தபடி நீந்த முடியவில்லை.

‘ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், திருப்பள்ளி எழுச்சிக்காகப் பயன்படும் மலர்களை காலந்தாழ்த்தி கொண்டு செல்ல நேர்ந்திடுமோ’ என்று கவலை கொண்ட அருள்வித்தன், வெள்ளத்தோடு போராடி நீந்தி முன்னேறுவதிலேயே குறியாக இருந்தான். அவனது பக்தியையும் உறுதியையும் கண்ட இறைவன், கருணை கொண்டு துறையைக் காட்டி அவனைக் கரையேற்றி விட்டார். அருள்வித்தனின் பெருமை உலகுக்குத் தெரிந்தது. இறைவனும் ‘துறை காட்டும் வள்ளலார்’ என்ற பெயரைப் பெற்றார்.

நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் சிவத் தலங்களை வணங்கிவிட்டு மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதரை வணங்க வந்தார். அப்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இறங்கும் துறையும், கரையேறும் துறையும் தெரியாது ஆற்றில் இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பின்னர் சம்பந்தர் ‘இங்கு துறை காட்டுபவர் எவரேனும் உளரோ?’ எனக் கேட்க, அவரருகே ஒரு வேடன் வந்தான்.
‘நான் துறை காட்டுகிறேன்’ என்று அந்த வேடன் கூற, சம்பந்தரும் அவன் பின்னே ஆற்றில் இறங்கினார்.

மார்பு அளவு வந்து கொண்டிருந்த தண்ணீர் விறுவிறுவென வடிந்து பாதத்தளவு ஆயிற்று. மறுகரைக்கு வந்தபோது தன்னோடு வந்த வேடனைத் தேடினார் சம்பந்தர். அவனைக் காணவில்லை.

அதன்பிறகே, தன்னோடு வந்தது இறைவன் என்பதை அவர் உணர்ந்தார். அதன் பலனாக ‘காவிரித் துறை காட்டினார்’ என இத்தலத்து இறைவனை தனது பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் சம்பந்தர்.

பிரச்சினைகளால் சூழப்பட்டு கரையேறத் தவிக்கும் மக்களுக்கு அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆபத்பாந்தவனாக இத்தலத்து இறைவன் விளங்குகிறார் என்பதே நிஜம்.

மயிலாடுதுறை - பொறையார் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது விளநகர் திருத்தலம்.

-மல்லிகா சுந்தர், சீர்காழி.

மேலும் செய்திகள்