ஆன்மிகம்
சகல யோகங்களையும் வழங்கும் சனி பகவான்!

சுபஸ்ரீ ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4-ந் தேதி (19.12.2017) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மூலம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் தனுசு ராசியில் சனி சஞ்சரிக்கின்றார்.
சுபஸ்ரீ ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4-ந் தேதி (19.12.2017) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மூலம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் தனுசு ராசியில் சனி சஞ்சரிக்கின்றார். அவரது அருட்பார்வை 28.3.2020 வரை மிதுனம், கன்னி, கும்பம் ஆகிய ராசிகளில் பதிகிறது. இந்த மாற்றம் வாக்கிய கணித ரீதியான சனிப் பெயர்ச்சியாகும். இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது தனுசு ராசிக்கு சென்று தக்க விதத்தில் நற்பலன்களை வழங்குவார்.

சுப கிரகமான குரு வீட்டில் அவர் சஞ்சரிப்பதால், கொடுக்கும் பலன் களில் சுப பலன்கள் அதிகரிக்கும் என்றே கருதலாம். சனியின் பார்வை கொடியது என்றோ, சனி ஒரு தீய கிரகம் என்றோ கருதக்கூடாது. உயிரை போக்கும் விஷம் கூட உயிரைக் காக்கும் மருந்தாக மாறுகின்றது. அதுபோல ‘ஆயுள்காரகன்’ என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் உயிரைத் தாக்கும் கிரகமல்ல, உயிரைக் காக்கும் கிரகம் என்பதை, சனி பகவானை வழிபடுவதன் மூலம் நீங்கள்அறிந்து கொள்ளலாம்.

சனியைக் கும்பிட்டால் நாம் கூப்பிட்டவுடன் கனிவோடு வந்து துயரங்களைப் போக்குவான். கவசம் பாடி வழிபட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பதிகம் பாடி வழிபட்டால் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். துதிப் பாடல்கள் பாடினால் தொல்லைகள் எல்லாம்அகன்றோடும். பதிகம் பாடினால் உதவி செய்பவரின் எண்ணிக்கை உயரும்.

எனவேதான் ‘மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூட செய்யமாட்டான்’ என்று சொல்லி வைத்தார்கள்.

மற்ற கிரக பெயர்ச்சிகள்

19.12.2017 முதல் 28.3.2020 வரை தனுசு ராசிக்கு செல்லும் சனியின் சஞ்சார காலத்தில் இரண்டு முறை குருப் பெயர்ச்சியும், ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ இருக்கின்றது. இடையில் சனி இரண்டு முறை வக்ரம் பெறுகின்றது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு 12 ராசிகளுக்கும் பலன்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

பொதுவாக அனைத்து ராசிக் காரர்களும் இது போன்ற மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சி காலங்களில் அவரவர் சுயஜாதகங்களை ஆராய்ந்து பார்த்து, பாக்கிய ஸ்தானத்தின் பலமறிந்து அதற்கேற்ப ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து யோக பலம்பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தேக நலனும் சீராகும். செல்வ வளமும் பெருகும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

அனைத்து ராசிக்காரர்களும் சனிப்பெயர்ச்சியின் விளைவாக சந்தோஷங்களை வரவழைத்துக் கொள்ள ஆலயத்திற்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வருவது நல்லது.

காரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு, தேனி மாவட்டத்தில் உள்ள குச்சானூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சிக்கோவில், வன்னி மரத்தடி சனீஸ்வரர், கண்டவராயன்பட்டி அருகில் உள்ள நல்லிப்பட்டி ஒற்றைச் சனீஸ்வரர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் கோவில் சனி பகவான் ஆகியவற்றிற்கெல்லாம் முறைப்படி சென்று வழிபட்டு வந்தால் முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்ல இயலும்.

நல்லதைச் சொல்வோம்!

நல்லதைச் செய்வோம்!

நல்லதே நடக்கும்!