நீதி வழங்குகிற இறைவன்

நீதி வழங்குதல் தொடர்பாக யூத சமூகத்தில் அடிக்கடி நடைபெறுகின்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த உவமை கூறப்பட்டுள்ளது.

Update: 2018-02-06 10:21 GMT
றைவனிடம் மிளிரும் நற்பண்புகளான ஞானம், நீதி, ஆற்றல், பேரன்பு போன்றவைகளை ஆண்டவர் இயேசு பல்வேறு உவமைகள் வாயிலாக தெளிவுற விளக்குகிறார். இதில் ‘நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றியதொரு எளிய உவமையில் நீதி வழங்குகிற இறைவனைக் குறித்துக் கூறுகிறார்.

ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். இவர் கடவுளுக்கு அஞ்சி நடவாதவராகவும், மக்களை மதியாதவராகவும் இருந்தார். அந்த நகரிலே ஆதரவற்ற ஒரு ஏழை கைம்பெண்ணும் இருந்தார். அந்த நடுவரிடம் கைம்பெண் சென்று, ‘‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’’ என்று தொடர்ந்து பலமுறை கேட்டுக்கொண்டே இருந்தார். நெடுங்காலமாக இதை கவனத்தில் கொள்ளாமல், எதுவும் செய்யாத நடுவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சாதவன், மக்களை மதியாதவன் என்பதை அறிந்தும் இந்த கைம்பெண் அடிக்கடி தொல்லைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாள். அதனால் நான் இவருக்கு நீதி வழங்குவேன், இல்லையானால் இவள் என் உயிரை வாங்கிக் கொண்டேஇருப்பாள்’ என்று ஆத்திரம் கொண்டார். நேர்மையற்ற நடுவரே நீதி செய்வாரென்றால், தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது இறைவன் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார்.

நீதி வழங்குதல் தொடர்பாக யூத சமூகத்தில் அடிக்கடி நடைபெறுகின்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த உவமை கூறப்பட்டுள்ளது. இங்கு இருவகைப் பண்பு களைக் கொண்ட மாந்தர்களைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று நேர்மையற்ற நடுவர், மற்றொன்று மனந்தளராத கைம்பெண். இங்கு சித்தரிக்கப்பட்டுள்ள நடுவரின் செயல்பாடுகளின் வாயிலாக இவர் உறுதியாக யூதரல்லாத ஒருவர் என்பதை யூகிக்க முடிகிறது. இயல்பாகவே, யூதர் களின் வழக்குகள் மூப்பர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுமே தவிர அதற்கு மாறாக யூதர்கள் அவர்தம் வழக்குகளை நீதிமன்றம் கொண்டு செல்வதில்லை. யூதர் களின் திருச்சட்டத்தின்படி ஒருவர் மட்டும் நடுவராக இருந்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவும் இயலாது. அங்கே மூன்று நீதிபதிகள் இருப்பார்கள் (இணைச் சட்டம் 19:15). பாதிக்கப்பட்டவாதியின் சார்பாக ஒருவர், குற்றஞ்சாட்டப்பட்ட பிரதிவாதியின் சார்பாக மற்றொருவர், இவர்கள் இருவரோடும் தொடர்பு இல்லாத, நடுவராய் நியமிக்கப்பட்ட வேறொருவர். மூன்றாம் நடுவர், கலிலேயா ஆட்சியாளர் ஏரோதுவினால் அல்லது உரோமைப் பேரரசால் நியமிக்கப்பட்டு ஊதியம் பெறுகின்ற நடுவராய் இருப்பார். இதில் சில நடுவர்கள் பொதுப் பழிப்புக்கு ஆளானவர்களாயும், மக்களின் வெறுப்புக்குள்ளாகியவர்களாகவும் இருந்தனர். இவ்வகை நடுவருக்கு கையூட்டு அளிக்கும் அளவிற்கு பணபலமில்லாதவர்களுக்கு தீர்ப்பு சாதகமாகும் என்ற நம்பிக்கை இருப்பதில்லை. மக்கள் அனைவரும் இதை நன்றாக அறிவர். இவர்கள் பண ஆசைப் பிடித்தவர்களாக, சிற்றின்பவாதிகளாகவும் இருந்தனர். இவர்களின் தேவைகளை நிறைவேற்றாத வாதிகளை தண்டனைக்கு உட் படுத்துவார்கள், இவர்களை மக்கள் ‘திருட்டு நடுவர்கள்’ என்றே அழைத்தனர்.

ஆதரவற்ற மற்றும் ஏழைகளின் அடையாளமாகவே இந்த கைம்பெண் இங்கு காட்டப்படுகிறார். பணம், பொருள் என எவ்வித ஆதாரமும் இவரிடம் இல்லை. இவ்வகையான நடுவரிடமிருந்து நேர்மையான நீதி பெறுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லாத போதும் இந்த கைம்பெண் இந்த நடுவரை நாடுகிறார். இவரிடம் இருந்த ஒரே ஆயுதம் மனந்தளராமை. இரக்கம், தயை, அன்பு, கடமையை நிறைவேற்றுதல், இறை அச்சம், மக்களை மதித்தல் ஆகிய எந்தவொரு லட்சணமும் அற்றவர்தான் இந்த நேர்மையற்ற நடுவர், என்றாலும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் நியாயம் கேட்டுக் கொண்டேயிருக்கிறார். “இவள் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பாள்” என்று சொல்லுமளவிற்கு மனந்தளராமல் நீதிபெறும் வரை முயற்சிக்கிறாள், விடா முயற்சியின் விளைவாக நீதி பெற முற்படுகிறாள். நேர்மையற்ற நடுவரே இப்படி இருக்கும் போது, பேரன்புமிக்க நம் தந்தையாம் கடவுள் தம் பிள்ளைகளுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ? விரைவில் நீதி வழங்குவார்.

ஆண்டவர் இயேசு அனைத்து தரப்பு மக்களும் சமூகத்தில் நீதியைப் பெற்று நிறைவாழ்வு வாழ வேண்டும் எனும் பேராவல் கொண்டிருந்தார். ஆதலால் தான் இறைமகன் இயேசுவின் போதனைகள் சமூகநீதிக்கு அதிக அழுத்தம் கொடுத்தன. இறைவன்" நீதியின் வடிவமாகவும், இறைவனே நீதியாகவும் விளங்குகிறார். “கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி! நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன்" (திருப்பாடல்கள் 7:11). “நான் வெல்வதை விட, என் அகவெளிச்சத்தின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால் அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்” என்றார் ஆபிரகாம் லிங்கன். நீதி புரட்டப்படுகிறபொழுது, நீதி மறுக்கப்படுகிறபொழுது, தாமதப்படுகிறபொழுது இறைவன் சினங்கொள்கிறார். ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார் (திருப்பாடல்கள் 11:7). மனந்தளராமல் மன்றாடுங்கள். நீங்கள் நீதியைப்பெறுவது உறுதி. ஏனெனில் அனாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. (இணைச் சட்டம் 10:18) 

மேலும் செய்திகள்