ஆன்மிகம்
விரதம் இருப்பது எப்படி?

இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும்.
மகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும்.

இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும்.

அதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காண்பிக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து `சிவாய நம நமச்சிவாய' என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை கேட்கலாம். சினிமா, டி.வி. பார்க்கக் கூடாது.

முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும், வில்வ பழத்தையும், நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளம் பழங்களையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும். நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் கிடைக்கும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் தங்களால் முடிந்த அளவு தானங்கள் செய்ய வேண்டும். விடிந்ததும் நீராடி, நித்ய கடன்களை முடித்து விட்டு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து உணவு உண்ண வேண்டும்.