வளம் மிகு வாழ்வு தரும் ஷடாரண்ய தலங்கள்

‘சிவம்’ என்றால் மங்கலம் என்ற பொருள் உண்டு. அத்தகைய சிவபெருமானை வழிபட்டால் வாழ்வில் மங்கலங்கள் உண்டாகும்.

Update: 2018-02-13 07:28 GMT
சிவபெருமானுக்கு உரிய விழாக்களில் முக்கியமானது, சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து ஆலயங்களுக்குச் சென்று சிவனை வழிபடுவது தனிச் சிறப்பு தரும்.

அந்த வகையில் சிவராத்திரி அன்று வழிபடக் கூடிய ஆலயங்களில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன.

இந்த ஷடாரண்ய ஷேத்திரங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் ஓடும் பாலாற்றின் வடபுறம் மற்றும் தென்புறக் கரைகளிலேயே அமைந்துள்ளன.

பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

இந்த ஷடாரண்ய ஷேத்திரங் களை மகா சிவராத்திரி அன்று ஒரே நாளில் வழிபட்டால் இமயமலைக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என் கிறார்கள்.

ஷடாரண்ய தல வரலாறு

ஆதியில் அன்னை பார்வதி தேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சீ புரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணமுடிக்க காஞ்சீபுரத்தில் எழுந்தருளினார்.

இறைவனின் திருமண விழாவை காண மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் காஞ்சீபுரத்திற்கு வருகை தந்தனர். காஞ்சி மாநகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தினசரி பூஜைகளை செய்வதற்கு அமைதியான இடம் ேதடினர்.

அதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த காடுகளில் தங்கினர். இவ்வாறு ரிஷிகள் தங்கி லிங்கங்கள் அமைத்து பூஜைகள் செய்த இடங்கள் பிற்காலத்தில் ஷடாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுயம்பு லிங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் மற்றும் மேல்விஷாரம், புதுப்பாடி ஆகிய இடங்களில் பாலாற்றின் தென்புற கரைகளிலும், அவரக்கரை, காரை, வன்னிவேடு, குடிமல்லூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் வடபுற கரைகளிலும் அமைந்துள்ளன.

‘ஷட்’ என்றால் ஆறு, ‘ஆராண்யம்’ என்றால் காடு என்று பொருள். ஆறு காடுகள் என்பது தான் ஆற்காடு என்று மருவியதாக ஒரு கூற்று உள்ளது. ஆறு முனிவர்கள் வழிபட்ட தலமே ஷடாரண்ய ஷேத்திரம் எனவும், சப்த ரிஷிகள் 7 பேர் வழிபட்ட தலமே ஷடாரண்ய ஷேத்திரங்கள் என்றும் இருவேறு கருத்துகள் பக்தர்களிடம் நிலவுகின்றன.

அவரக்கரை

ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள அவரக்கரையில், காச்யப முனிவர் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் உள்ளது. இங்கு காச்யபேஸ்வரர் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி என்பதாகும்.

வேப்பூர்

ஆற்காட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், வேலூர் -ஆற்காடு நெடுஞ்சாலையில் பாலாற்றின் தென்புற கரையில் உள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட தலமாகும். இங்கு இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் பாலகுஜாம்பிகை.

ஒரு காலத்தில் வேப்ப மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இந்தப் பகுதி வேப்பூர் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட இடமாதலால், இங்கு வசிஷ்ட முனிவரின் சிலையும் உள்ளது. அம்மையப்பர் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளிப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு.

மேல்விஷாரம்

வேலூர் - ஆற்காடு நெடுஞ் சாலையில் உள்ளது மேல்விஷாரம். இங்கு பாலாற்றின் தென் கரையில் இருக்கிறது வடிவுடையம்பிகை சமேத வால்மீகீஸ்வரர் கோவில். அந்த காலத்தில் இந்தப் பகுதியில் எட்டி மரம் நிறைந்து காணப்பட்டது. அதனால் இந்த பகுதி விஷ விருட்ச வனம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மறுவி விஷாரம் எனப் பெயர் பெற்றதாக கருதப்படுகிறது.

வால்மீகி முனிவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், இங்குள்ள இறைவன் வால்மீகீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

புதுப்பாடி

ஆற்காட்டில் இருந்து கிழக்கு புறத்தில் 6 கி.மீ. தொலைவில் ஆற்காடு- செய்யாறு சாலையில் உள்ளது புதுப்பாடி. பாலாற்றின் தென்கரையில் உள்ள இந்த கிராமம் பழங்காலத்தில் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது. எனவே சுதவனம் என்று அழைக்கப்பட்டதாக தெரிகிறது. பரத்வாஜ முனிவரால் பூஜிக்கப்பட்டதால், இங்குள்ள ஆலயம் பரத்வாஜீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அன்ைனயின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. கோவிலில் பரத்வாஜ முனிவர் பிம்பம் உள்ளது.

காரை

ராணிப்பேட்டை நகரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரை. இங்கு கவுதம முனிவர் லிங்கம் அமைத்து வழிபட்ட ஸ்தலம் உள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள கோவிலில் இறைவன் கிருபாம்பிகை சமேத கவுதம ஈஸ்வரராய் காட்சி அளிக்கிறார். கோவில் வளாகத்தில் கவுதம முனிவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

குடிமல்லூர்

வாலாஜாவில் இருந்து பாலாறு அணைக்கட்டு செல்லும் சாலையில், சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குடிமல்லூர். இங்கு அத்திரி மகரிஷி தவம் செய்து பூஜித்த அத்திரியீஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் உள்ள இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி என்பதாகும். இந்த கோவிலில் அத்திரி முனிவரின் சன்னிதியும் உள்ளது.

வன்னிவேடு

வாலாஜாவில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது வன்னிவேடு. இந்த கிராமம் பாலாற்றின் வடகரையில் உள்ளது. இது முன் காலத்தில் வன்னி மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. அகத்திய மகரிஷி இங்கு லிங்கத்தை நிர்மானித்து வழிபட்டதால், இது அகத்தீஸ்வரம் என அழைக்கப்படுகிறது.

இங்குள்ள கோவிலில் புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கம், மணலில் தோன்றிய சுயம்பு லிங்கம் என்பது தனிச் சிறப்பாகும். கோவிலில் அகத்திய மகரிஷியின் சிலை உள்ளது.

பழமையான சிவலிங்கம்


இந்தக் கோவில்களுடன் பக்தர்கள் தற்போது காரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள நவ்லாக் பண்ணை பகுதிக்குள் உள்ள பழமையான சிவலிங்கம் ஒன்றையும் வழிபட்டு வருகிறார்கள். இது விசுவாமித்திர முனிவர் வழிபட்ட லிங்கம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்த சிவாலயம் பராமரிப்பின்றி நாளடைவில் மறைந்து போனதால், ஆலய சிவலிங்கத்தை மட்டும் மீட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த இறைவனின் திருநாமம் விசுவாமித்திர ஈஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் அபிராமி.

மேலும் செய்திகள்