ஆன்மிகம்
எண்ணங்களை ஈடேற்றும் மணிகண்டீஸ்வரர்

பல்லவர், சோழர் திருப்பணிச் செய்து போற்றிய ஆலயம், சைவ, வைணவ சமயங்களை போற்றும் திருக்கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்.
பல்லவர், சோழர் திருப்பணிச் செய்து போற்றிய ஆலயம், சைவ, வைணவ சமயங்களை போற்றும் திருக்கோவில், வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் இறைவன், மகாலட்சுமியை மார்பிற்கு பதிலாக தலைமீது வைத்திருக்கும் ஸ்ரீனிவாசன் வாழும் கோவில், சங்கு, சக்கரங்களை திசை மாற்றி வைத்துள்ள திருமால் குடியிருக்கும் திருத்தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது சென்னையை அடுத்த படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்.

தல வரலாறு

பல்லவர், சோழர் காலத்தில் இந்த ஆலயம் சைவ, வைணவ சமயங்களை ஒன்றாகப் போற்றும் திருத்தலமாக புகழ்பெற்று இருந்துள்ளது. காலப்போக்கில், அந்நியர்கள் படையெடுப்பால் சிதிலமடைந்த இவ்வாலயம், 1992–ம் ஆண்டில் கிருஷ்ணவேணி அம்மையார் என்ற அடியாரின் பெருமுயற்சியால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்து இன்று வழிபாட்டுக்கு வந்துள்ளது.

படூர் கடற்கரைப் பகுதி, பழங்காலத்தில் படகுகளின் துறைமுகமாக விளங்கியது. படகுகள் நிறைந்த ஊராக விளங்கியதால் ‘படகூர்’ என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி, ‘படூர்’ என அழைக்கப்படுகிறது.

மணிகண்டீஸ்வரர் – மரகதவல்லி

திருக்கோவிலின் பிரதான நாயகனாக விளங்குபவர் மணிகண்டீஸ்வரர். மன்னர் கால கருவறையில் இடம் மாறாமல், கருவறைக்குள் குடியிருக்கும் எழிலான மூர்த்தியாக மணிகண்டீஸ்வரர் விளங்குகிறார். சதுர வடிவ ஆவுடையாரில் உயரமான லிங்கத் திருமேனி கொண்டவராக இந்த இறைவன் பொலிவுடன் காட்சியளிக்கிறார். மன்னர் காலத்தில் இந்த இறைவன், சிறுகாளேஸ்வரமுடைய மகாதேவர், சிறுமண்ணீஸ்வரமுடைய மகாதேவர், திருகாரீஸ்வரமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். இவரது கருவறை எதிரே தென்முகமாக, அன்னை மரகதவல்லி, நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையோடு காட்சியளிக்கிறாள்.  

ஆலய அமைப்பு

கிழக்கு முகமாய் எளிய நுழைவு வாசலைக் கொண்டு இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் மூன்று அங்கங்களைக் கொண்டு விளங்குகின்றது. நடுநாயகமாக மணிகண்டீஸ்வரர், இடதுபுறம் புதியதாக அமைந்த ஐயப்பன் ஆலயம், வலதுபுறம் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளன. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சிதர, மகாமண்டபம், கருவறை முன்மண்டபம், கருவறையும் காட்சி தருகின்றன. மகாமண்டபத்தில் அன்னை மரகதவல்லி சன்னிதி இருக்கிறது.

கருவறை முன்பாக விநாயகர், முருகன், கருவறைச் சுற்றில் விநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சோழர் கால சண்டிகேசுவரர் ஆகியோரது திருமேனிகள் காணப்படுகின்றன. இதுதவிர பைரவர், பவானி அம்மன், சூரியன், நந்திதேவருடன் ஜலகண்டேஸ்வரர் ஆகியோரும் தரிசனம் தருகின்றார்கள்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனையும், இறைவியையும் வணங்கினால், திருமணத் தடைநீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாடு சென்றுவர விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தலமாகவும் இது விளங்குவதாக சொல்கிறார்கள்.

விழாக்கள்

அண்மையில் குடமுழுக்கு விழா நடந்தேறிய இந்த ஆலயம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்தக் கோவிலில் பிரதோ‌ஷம், தேய்பிறை அஷ்டமி, பவானி அம்மனுக்கு ஆடி ஞாயிறு, ஐய்யப்பனுக்கு மாதந்தோறும் ஐந்து நாட்கள் நெய் அபிஷேகம், ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருமண வைபவம், மார்கழியில் திருப்பாவை உற்சவம் ஆகியவை சிறப்போடு நடத்தப்படுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், பழைய மகாபலிபுரம் சாலையில், படூர் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், மகாபலிபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் படூர் என்ற ஊர் இருக்கிறது.

–பனையபுரம் அதியமான்.

பெருமாள் தலையில் லட்சுமி

மகாலட்சுமியை தலையில் தாங்கி நிற்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீற்றிருக்கும் சன்னிதியானது, மணிகண்டீஸ்வரர் ஆலயத்தின் ஒரு அங்கமாக தனித்த ஆலயம் போல் விளங்குகிறது. இங்குள்ள பெருமாள் பல்லவர் காலத்தைச் சார்ந்தவர். மகாலட்சுமியோடு வீற்றிருக்கும் பெருமாள், பொதுவாக தாயாரை தன்னுடைய மார்பில் தாங்கியபடிதான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு தாயாரை தன்னுடைய தலையின் மீது தாங்கி நிற்கும் அபூர்வ கோலத்தில் பெருமாள் திருக்காட்சி தருகிறார். இது தவிர, இந்த ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருக்கரங்களில் சங்கும், சக்கரமும் திசை மாறி இருக்கும் அரிய கோலத்தையும் பார்க்கலாம். ஊழி காலத்தில் மக்களைக் காக்க, சக்கரத்தையும், சங்கையும் ஏவும் கோலம் இது எனக் கருதப்படுகிறது. மகாலட்சுமி தாயார் மற்றும் ஆண்டாள் கருவறையின் முன்புறம் அமைந்திருக்க, எதிரில் அனுமன் பவ்யம் காட்டி வணங்கி நிற்கிறார். கருவறையின் பின்புறம் தன்வந்திரியின் தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

ஜலகண்டேஸ்வரர்

கொடி மரத்திற்கு அருகே வானம் பார்த்தபடி, நந்தியோடு ஜலகண்டேஸ்வரர் சிறிய திருமேனியாக அமைந்துள்ளார். இவரை பக்தர்கள் தங்கள் கரங்களில் தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் இதற்கென பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவரை பூஜித்தால் தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் விரைவில் ஈடேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.