திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதி
திருச்செந்தூர் முருகன் கோவிலின் நாழிக்கிணற்றுக்கு தெற்கு புறத்தில் இந்த மூவர் சமாதி அமைந்துள்ளது.;
தமிழகத்தில் உள்ள பல கோவில்கள் மன்னர்களும், மிகப்பெரிய வசதி படைத்தவர்களும் கட்டியெழுப்பிய நிலையில், அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டியெழுப்பியவர்கள் முற்றும் துறந்த முனிவர்களாக, ஆண்டிகளாக வாழ்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது.
ஆம், திருச்செந்தூர் முருகன் கோவில் பிரமாண்டமாக உருவாவதற்கு முக்கிய பங்களிப்பை செய்தவர்கள் மூன்று சுவாமிகள் என வரலாறு குறிப்பிடுகிறது. அவர்கள் ஸ்ரீ காசி சுவாமிகள், ஸ்ரீ மௌன சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ஆறுமுக சுவாமிகள் ஆகியோர் ஆவார்கள். மேலும், ஸ்ரீ தேசிக மூர்த்தி மற்றும் ஸ்ரீ வள்ளி நாயக சுவாமி ஆகியோரும் கோவில் திருப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டு திருப்பணிகளை செய்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுற்றியுள்ள மண்டபங்களையும், கோபுரங்களையும் இந்த மூன்று சுவாமிகளும் சேர்ந்துதான் கட்டினார்கள் என்றும், இதனால்தான் இவர்கள் மூவரின் ஜீவசமாதியும் திருச்செந்தூர் கோவில் அருகிலே அமைந்துள்ளது என பலரும் குறிப்பிடுகிறார்கள்.
முருகன் கோவிலின் நாழிக்கிணற்றுக்கு தெற்கு புறத்தில் இந்த மூவர் சமாதி அமைந்துள்ளது. மூன்று சுவாமிகளின் திருவுருவங்களும் முருகன் கோவிலின் உள்பிரகாரத்தில் குரு பகவான் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள மூன்று தூண்களில் சிலை வடிவில் அமைந்துள்ளது.
ஸ்ரீ வள்ளி நாயக சுவாமியின் ஜீவ சமாதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து சரவணப் பொய்கை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஸ்ரீ தேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதி ஆழ்வார்திருநகரி அருகே உள்ள காந்திஸ்வரம் சிவன் கோவில் பின்புறம் அமைந்துள்ளது.
மூவர் சமாதி கோவில் வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. குரு பகவானுக்கு ஏற்ற கிழமையாக வியாழக்கிழமையைப் பொதுவாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே, இந்த வியாழக்கிழமை நன்னாளில் மூவர் சமாதிகளான ஜீவ சமாதிக்குச் சென்று, தியானம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஏதேனும் வேண்டுதல் இருந்தாலும் அதனைக் கோரிக்கையாக வைத்து தியானம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆன்மிக அன்பர்களிடம் நிலவுகிறது.
இந்த மூவர் சமாதியுடன், ஸ்ரீ வள்ளி நாயக சுவாமி மற்றும் ஸ்ரீ தேசிக மூர்த்தி சமாதிகளையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் முருகப்பெருமானின் முழுமையான அருளை பெறலாம் என்பது ஐதீகம்.