ஜோதிடத்தில் மருத்துவம் : சூரியன் தரக்கூடிய நோய்கள்

சூரியனோடு, ராகு, கேது, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இணையும் காலகட்டத்தில், பொருளாதாரத்தில் முதன்மை பெற்ற நாடுகளுக்கு தீவிரவாதம் மற்றும் இயற்கை பேரிடர்களால் பல தொல்லைகள் ஏற்படக் கூடும்.

Update: 2018-04-27 00:45 GMT
 படுபாதகச் செயல்கள் தலைவிரித்தாடும். அங்குள்ள மக்கள் பெரும் பயத்தில் வாழும் சூழ்நிலை உருவாகும். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி உண்டாகும். நிர்வாகத்தன்மை சீர்குைலயும்.

அதேபோல் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில், ஆட்சி குழப்பம், முக்கிய தலைவர்களின் இறப்பு, ஆட்சி கவிழ்ப்பு, கட்சி களின் மோதல், பொதுமக்கள் குழப்பம், உலகையே அச்சப்படுத்தும் புதிய நோய்கள், தொற்று நோய்களால் பொதுமக்கள் பாதிப்பு, அரசு மீது பொதுமக்கள் கோபம் கொள்ளுதல், பொதுமக்கள் புரட்சிகளில் இறங்குதல் போன்வை ஏற்படக்கூடும்.

ஜாதகத்தில் சூரியன் யோகம் தரக்கூடிய நிலையில் இருந்தால் பல நன்மைகளும் உண்டாகும். சூரியன் யோகம் ஒருவரை உலகமே திரும்பி பார்க்க வைக்கும். தீராத நோய்கள் அனைத்தும் தீரும். மன தைரியம், உடல் வலிமை, நோயைத் தாங்கும் சக்தி வந்து சேரும். அரசியல் அதிகாரம் தானாக தேடி வரும். நற்பெயர் எடுப்பார்கள், தலைவர் பதவி தேடி வரும். மிகப்பெரிய தொழிற்சாலைக்கு முதலாளி மற்றும் நிர்வாகியாக வரக்கூடும்.

வேலைக்காரர்கள் விசுவாசமாக இருப்பார்கள். தந்தை வழி உதவிகள், தந்தைக்கு உயர்வுகள், வெற்றிகள் வரக்கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரலாம். மனதில் நினைத்ததை நடத்திக் காட்ட போதிய மன ஆற்றல், அறிவும், திறமையும் வெளிப்படும். தெளிவான மனநிலை பிறருக்கு அறிவுரை கூறி வழி நடத்தும் சக்திகள் வரக்கூடும். அரசனையே எதிர்த்து நிற்கும் மனத் துணிவை பெறுவீர்கள். எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு திடமான முடிவெடுக்கும் சக்தியை தருவதும், பிரச்சினைகளில் இருந்து விடுபட வைக்கும் சக்தியும் சூரியனுக்கு உண்டு.

சூரியனால் வரக்கூடிய நோய்கள்

மனிதனுக்கு தேக புஷ்டி என்னும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். பலம் குறைந்து காற்று போன்ற உடலை தருவதும் சூரியனே. உடல் உஷ்ணம், முதுமையில் வரும் தளர்வு உள்ளிட்ட நோய்கள், நாக்கு ருசியை மறந்துபோவது, தெளிவான மனநிலை இல்லாமல், தன்னம்பிக்கை குறைந்து சோர்வான உடலைத் தருவது, எந்த நேரமும் அலைந்து திரிந்தபடி உடலை வருத்திக் கொள்வது, வலுவான எலும்புகள் இல்லாமல் இருப்பது, இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் பார்வைக் கோளாறு, தலைவலி, தலைசுற்றல், சிறுசிறு பிரச்சினைகளுக்கு கடும் கோபம் கொள்ளுதல் உள்ளிட்ட நோய்களுக்கு சூரியனே காரணமாக இருக்கிறார்.

*    ரிஷபம், மகரம், கும்பம் ஆகியவை சூரியனுக்கு பகை ராசிகளாகும். இந்த ராசிகளில் சூரியன் நின்றால், அந்த நபருக்கு வயிற்றுக் கோளாறு, மூலநோய் ஏற்படும். மேலும் உங்களது திறமைக்கு சோதனைகள் வரக்கூடும். தந்தைக்கு பல சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும்.

*    சூரியன் தனக்கு நீச்ச ராசியான துலாம் ராசியில் நின்று இருந்தால், மன தைரியம் குறையும். தலையில் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். நெஞ்சு வலி, இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். தந்தை இல்லாமல் இருக்கலாம் அல்லது உயிரோடு இருந்தும் எவ்விதமான பயன் இல்லாமல் இருக்கலாம்.

*    சூரியன் தனது பகை கிரகங்களான சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோரோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் சரி... அந்த நபர்களுக்கு எலும்பு முறிவு, தலையில் ரத்தம் கசிவு ஏற்படக்கூடும். தந்தை சுயநலமாக இருப்பார். தந்தையின் மரணத்திற்கு ஜாதகர் ஒரு வகையில் காரணமாக இருப்பார்.

*    சூரியன் தனது பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், நோயை தீர்ப்பதில் போதிய அக்கறை காட்டாமல் இருப்பார்கள். நோய்களை பெருக்கிக்கொள்ளும் வகையில் நடந்துகொள்வார்கள்.

*    சூரியன் லக்னத்திற்கு 6,8,12-ம் ராசியில் மறைவு பெற்று நின்றால், பரம்பரை வியாதி வரக்கூடும். நோய்க்கு தவறான மருந்துகள் எடுத்து அவதிப்படுவார்கள். தந்தைக்கு கண்டங்கள் வரக்கூடும் அல்லது சிறு வயதில் தந்தையை இழந்து இருப்பார்கள்.

*    சூரியன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, நோய்கள் அகல அவ்வப்போது மாத்திரை எடுத்துக் கொள்வீர்கள். அதனால் நிரந்தர தீர்வு காண முடியாத நோய்கள் வரலாம். இந்த நபரின் தந்தைக்கு ஆயுள் குறைவதும், தந்தையால் எவ்விதமான நன்மைகள் இன்றியும் இருப்பார்.

*    சூரியனே லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் பாவியாகவும் இருந்தால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் பலவும் தடைபடும். கண் பார்வை குறையும். தொற்று நோய்கள், பரம்பரை நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு உதவாத ஜாதகராக அவர் இருப்பார்.

*    சூரியனை பகை கிரகங்கள் பார்வை செய்தால், புதுவகையான நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.

*    சூரியன் அஷ்டவர்க்கத்தின் 4 பரல்களுக்கு கீழ் இருந்தால், சூரிய கிரகத்தால் வரக்கூடிய நோய்களில் ஏதாவது ஒன்று ஜாதகருக்கு வரக்கூடும். நெஞ்சு பதறக்கூடிய பல சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். தந்தைக்கு வளர்ச்சி தடைபடும்.

சூரியனுக்கானவை

காரகன்     - பிதா

தேவதை     - சிவன் (கிரகக் கடவுள்)

தானியம்     - கோதுமை

உலோகம்     - தாமிரம்

நிறம்     - சிவப்பு

குணம்     - தாமஸம் (அரக்கர் குணம்)

சுபாவம்     - குரூரர்

சுவை     - காரம்

திக்கு     - மையம்

உடல் அங்கம்     - மார்பு

தாது     - எலும்பு

நோய்     - பித்தம்

பஞ்சபூதம்     - நெருப்பு

பார்வை நிலை     - இருக்கும் இடத்தில் இருந்து முழுமையாக 7-ம் பார்வை,
                                       3,10-ம் இடம் கால் பங்கு,  5,9-ம் இடம் அரை பங்கு, 4,8-ம்
                                       இடம் முக்கால் பங்கு

பாலினம்     - ஆண்

உபகிரகம்     - காலன்

ஆட்சி ராசி     - சிம்மம்

உச்ச ராசி     - மேஷம்

மூலத்திரிகோண ராசி - சிம்மம்

நட்பு ராசி     - கடகம், விருச்சிகம்,         தனுசு, மீனம்

சமமான ராசி     - மிதுனம், கன்னி

பகை ராசி     - ரிஷபம், மகரம், கும்பம்

நீச்ச ராசி     - துலாம்

திசை ஆண்டுகள் - ஆறு ஆண்டுகள்

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒரு மாதம் காலம்

நட்பு கிரகங்கள்     - சந்திரன், செவ்வாய், குரு

சமமான கிரகங்கள் - புதன்

பகையான கிரகங்கள் - சுக்ரன், சனி, ராகு-கேது

அதிக பகையான கிரகம் - சனி

நட்சத்திரங்கள்     - கிருத்திகை, உத்திரம்,         உத்திராடம்

மேலும் செய்திகள்