பலவீனம், பலமாகும்

இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து அழைத்து வர மோசேயைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். மோசேயை அழைக்கும் போது, அவரிடம் ‘நான் உன் முற்பிதாக்களின் கடவுள்’ என அறிமுகம் செய்து கொள்கிறார்.

Update: 2018-06-20 06:58 GMT
‘உலகின் அனைத்து மக்களுக்கும் நானே கடவுள்’ என்பதைக் குறிப்பிடவே அவர் மோசேயிடம் இதைச் சொல்கிறார். அதில் நீங்களும் நானும் அடக்கம்.

கடவுளின் அழைப்பை ஏற்று முன் பின் பரிச்சயமற்ற ஒரு நாட்டிற்குச் சென்றவர் ஆபிரகாம். அவருக்கும் இவர் கடவுள்.

வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறாமல் போனவர் ஈசாக்கு. அவருக்கும் இவர் கடவுள்.

மூத்தவனுக்கு வரவேண்டிய தந்தையின் ஆசியைத் தந்திரமாய் பறித்தவர் யாக்கோபு, அவருக்கும் இவர் கடவுள்.

பணிந்து நடக்கும் நல்லவருக்கும், வரலாற்றில் சிறப்பிடம் பெறாமல் போகிறவனுக்கும், தந்திரக்காரனுக்கும் இவரே கடவுள்.

மோசே கடவுளின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான்கு எதிர்ப்புகளை அவர் தெரிவிக்கிறார்.

முதலாவது, “நான் தகுதியற்றவன்” என்கிறார். நான் எம்மாத்திரம் என தன்னைப் பற்றி மோசே கூறுகிறார். கடவுளோ, “பயப் படாதே, நான் உன்னோடு இருப்பேன்” என அவருக்கு உறுதி கொடுக்கிறார். “நான் தகுதியற்றவன்” எனும் சிந்தனை நம்மை வலுவிழக்கச் செய்யலாம். ஆனால் இறைவன் நம்மோடு இருக்கிறார் எனும் சிந்தனை நம்மை வலுவூட்டும் செய்தியாக மாறிவிடுகிறது.

இரண்டாவது, எதிர்ப்பு, ‘கடவுளுடைய பெயர் என்ன?’ எனும் சிந்தனை. கடவுள் யார் என்பது எனக்கே தெரியாவிட்டால் நான் எப்படி அடுத்தவர்களுக்குச் சொல்ல முடியும்.

எகிப்தில் வாழ்ந்தவர் தான் மோசே. அங்கே பல கடவுள்களை வணங்கிய பழக்கம் அவருக்குத் தெரியும். அதனால் தான் “கடவுளின் பெயர் என்ன?” என்பதை அவர் அறிந்து கொள்ள விரும்பினார்.

மூன்றாவது, ‘என்னை நம்புவார்களா?’ எனும் கேள்வி. நான் ஆண்டவரின் பணியை செய்யச் செல்லும் போது மக்கள் என்னை நம்பு வார்களா எனும் கேள்வி காலம் காலமாய் எழுகின்ற ஒரு கேள்வியே. இறைவன் செய்கின்ற வல்ல செயல்கள் மட்டுமே மக்களுக்கு சட்டென ஒரு நம்பிக்கையை உருவாக்கித் தருகிறது.

பைபிளில் வருகின்ற, கிதியோனுடைய வாழ்க்கை இதற்கு ஒரு உதாரணம். “நான் வெட்ட வெளியில் ஒரு கம்பளி விரித்து வைக்கிறேன். நிலம் காய்ந்திருந்து, கம்பளி மட்டும் ஈரமாய் இருந்தால் உம்மை நம்புவேன்” என கடவுளிடம் சொல்கிறார் கிதியோன். அப்படியே நடக்கிறது.

எனினும் நம்பிக்கை வரவில்லை, “நாளை கம்பளி மட்டும் காய்ந்து இருக்க வேண்டும் நிலம் ஈரமாய் இருக்கட்டும். அப்படி நடந்தால் உம்மை நம்புவேன்” என்கிறார். அப்படியே நடக்கிறது. இப்படிப்பட்ட வல்ல செயல்களே இறைவன் மீதான நம்பிக்கைகளை வளமையாக்குகின்றன.

நான்காவது, ‘நான் திக்குவாயன்’ என்கிறார் மோசே. இது வெகு சகஜமாக இன்றும் நாம் கூறுகின்ற வார்த்தை. “எனக்கு பேச தெரியாதும்மா?”. நம்மையே நாம் குறைத்து மதிப்பிடுகின்ற செயல் தான் இது.

இன்று சிலுவை நிழலில் நமக்குரிய சிந்தனை இந்த மறுப்புகளைத் தாண்டுகின்ற சிந்தனைகளால் அமைகிறது.

1. பலவீனங்களைத் தாண்டிய பலம்.

எப்போதெல்லாம் நான் எனும் எண்ணத்துடன் திரிகிறோமோ அப்போதெல்லாம் பலவீனராய் மாறிவிடுகிறோம். என்னை நம்புகிறார்களா? நம்மை நம்புவார்களா? என்பதெல்லாம் சுய பலத்தின் மீதான நம்பிக்கை. ‘நம்மை அனுப்பிய கடவுளை நம்புவார்களா?’ என்பதே கேட்கப்படவேண்டிய கேள்வி.

‘எனக்கு வலிமையில்லை, நான் சிறியவன், சமூகத்தில் முக்கியமற்றவன்’ என நாம் நினைக்கும் போதெல்லாம் நமக்கு சிலுவை பலம் தருகிறது. ‘பேசத் தெரியாது’ என சொன்ன மோசே தான் மாபெரும் விடுதலை வீரரானார். ‘பேசத்தெரியாத சிறுபிள்ளை நான்’ என்று சொன்ன எரேமியா தான் மாபெரும் தீர்க்கதரிசி ஆனார்.

2. ஒத்துழைக்க வேண்டுமென எதிர்பார்க்கும் பலம்

இருவர் இணைந்து பணி செய்வதை இறைவன் அனுமதிக்கிறார். மோசேக்கு துணையாய் ஆரோனை அனுப்புகிறார். எலியாவுக்குத் துணையாக எலிசா இருக்கிறார். பின்னாளில் எலிசா மாபெரும் தீர்க்க தரிசியாய் மாறினார். நாமும் இறைவனுக்கு ஒத்துழைப்பு நல்கும் மனிதர்களாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

3. அற்பமானவை ஆச்சரியமாய் மாறும் பலம்

எதிரி மன்னனுக்கு முன்னால் நின்ற மோசே தண்ணீரை ரத்தமாய் மாற்றிக் காட்டினார். இது ஒரு அடையாளமாய் மாறியது. மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் அடையாளம்.

தாவீது எனும் சின்னப் பையனின் கையில் இருந்த சாதாரண கூழாங்கற்கள் கோலியாத் எனும் மாவீரனைச் சாய்த்தது. கூழாங்கல் அடையாளம், இறைவன் அதை ஆச்சரியமாய் மாற்றுகிறார்.

அன்று எகிப்தின் எல்லைக்கோட்டை இஸ்ரயேல் மக்கள் தாண்ட ரத்தமாய் மாறிய தண்ணீர் அடையாளமாய் அமைந்தது.

இன்று பாவம் எனும் எல்லைக்கோட்டைத் தாண்ட, சிலுவையின் ரத்தம் நமக்கு மீட்பின் அடையாளமாய் இருக்கிறது.

(தொடரும்) 

மேலும் செய்திகள்