மங்காத வாழ்வருளும் மாங்கனித் திருவிழா

ஈசன் அம்மைக்கு அளித்ததும், அம்மையார் ஈசனுக்குப் படைத்ததுமான மாங்கனியின் பெயராலேயே ‘மாங்கனித் திருவிழா’ இங்கு வெகுசிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Update: 2018-06-26 10:19 GMT
27-6-18 அன்று மாங்கனித் திருவிழா

காரைக்கால்... இது ஒரு ஆன்மிக வனப்பும், வியாபார வனப்பும் நிறைந்த அருள்பூமி. இங்கு ஒரு வீட்டில் முழுநேரமும் சிவநாமம் கேட்டுக் கொண்டே இருக்கும். அது புனிதவதியின் வீடு.

ஒரு நாள் ‘அம்மா’ என்ற குரல் வாசலில் கேட்க திரும்பிப் பார்த்தாள் புனிதவதி. வீட்டு வாசலில் சிவனடியார் ஒருவர், பசியால் வாடி வதங்கி நின்றிருந்தார். ‘அடுப்பில் இப்போதுதான் உலை வைத்திருக்கிறேன். சற்றுபொறுங்கள்’ என்று கூறினாள். ஆனால் அவ்வளவு பொறுமை சிவனடியாருக்கு இல்லை. அந்த அளவுக்கு பசி.

‘இல்லை தாயே! பசியில் உயிர் போகிறது. ஏதேனும் இருப்பதைக் கொடு தாயே’ என்றார் சிவனடியார்.

சற்றே யோசித்தவளுக்கு மதிய உணவிற்காக தன் கணவன் பரமதத்தன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகள் நினைவுக்கு வந்தது. உடனே அதில் ஒரு மாங்கனியை எடுத்து வந்து சிவனடியாருக்கு கொடுத்து மகிழ்ந்தாள். சிவனடியார் அதை உண்டு மகிழ்ந்தார்.

‘பசியும்.. தான் வந்த பணியும் முடிந்ததில், புனிதவதியை வாழ்த்தி விட்டு, அந்தச் சிவனடியார் மறைந்தார். ஆம்! சிவனடியார் வேடத்தில் வந்தவர் சிவபெருமான்.

வியாபார விஷயமாக வெளியே சென்றிருந்த பரமதத்தன், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிட்டான். சமைத்து வைத்த அறுசுவை உணவுகளை, அன்புக் கணவனுக்கு பரிமாறினாள் புனிதவதி.

‘புனிதா! நான் கொடுத்தனுப்பிய மாங்கனியைக் கொண்டு வா’ என்றான் பரமதத்தன்.

சிவனடியாரிடம் கொடுத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை எடுத்து வந்து தன் கணவனுக்கு கொடுத்தாள். அதை உண்டவன், மாங்கனியின் சுவையில் மயங்கிப்போனான். அதன் விளைவு.. மற்றொரு மாங்கனியையும் கொண்டுவரும்படி தன் மனைவியிடம் கூறினான். பதறித்தான் போனாள் புனிதவதி.

‘மற்றொரு கனியை சிவனடியாருக்கு கொடுத்து விட்டேன்’ என்று கூறினால், எங்கே கணவன் கோபித்துக் கொள்வானோ என நினைத்த புனிதவதி, பூஜை அறையை நோக்கிச் சென்றாள். ஈசனை நோக்கி ‘ஓம் நமசிவய’ என்று துதித்தாள். தான் இக்கட்டில் மாட்டிக் கொண்டதை கூறிச் சிவபெருமானை வேண்டினாள்.

இறைவனைத் துதிப்பதற்காக புனிதவதி ஒன்றிணைத்த கைகளில் ஒரு மாங்கனி வந்துஉதித்தது. ‘தன் பிரச்சினை தீர்ந்து விட்டது’ என்று எண்ணிய புனிதவதி, அந்த மாங்கனியை கணவனிடம் கொண்டுபோய் கொடுத்தாள். ஆனால் அந்த மாங்கனியால் தான் புதிய பிரச்சினை ஆரம்பமாகப் போகிறது என்பதை அப்போது அவள் அறியவில்லை.

மனைவி கொடுத்த இரண்டாவது மாம்பழத்தை ஆவலுடன் சாப்பிட்டான் பரமதத்தன். முந்தைய மாம்பழத்தை விட, இதன் சுவை பன்மடங்கு அதிகமாக இருந்தது. ‘ஒரே மரத்தில் உள்ள இரண்டு மாம்பழங்களின் சுவையில் இவ்வளவு பெரிய மாற்றம் இருக்குமா?’ என்று சந்தேகித்த பரமதத்தன், புனிதவதியிடம் இதுபற்றி கேட்டான். கணவனிடம் பொய் உரைக்க பயந்த புனிதவதி, நடந்தவற்றை அப்படியே பதற்றத்துடன் கூறி முடித்தாள். அதைக்கேட்டதும், புனிதவதியிடம் இருந்த பயமும், பதற்றமும் பரமதத்தனைத் தொற்றிக்கொண்டது.

‘நீ கூறுவது உண்மையானால், ஈசனிடம் இருந்து இன்னொரு மாம்பழத்தை பெற்று எனக்குத் தருக’ என்றான் பரமதத்தன். புனிதவதியும் ஈசனை வேண்டினாள். இன்னொரு மாம்பழம் அவள் கையில் வந்தது. மறுநொடியே புனிதவதியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் பரமதத்தன். பதறிப்போனாள் புனிதவதி.

‘தாயே! நீ சாதாரணப் பெண் அல்ல; தெய்வ மங்கை’ என்று போற்றித் துதித்தான். தெய்வத்துடன் இல்லறம் நடத்துவது தகாது என்று கருதியவன் வீட்டை விட்டு வெளியேறினான். பாண்டிய நாட்டுக்குச் சென்றவன், அங்கு திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினம் என்னும் தலத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, ‘புனிதவதி’ என்று பெயரிட்டான்.

வருடங்கள் பல ஓடியும், வழிமேல் விழி வைத்து தன் கணவனுக்காக காத்திருந்தாள் புனிதவதி. வெகு காலம் கழித்துதான் பரமதத்தனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது அவளுக்கு தெரியவந்தது. வாழ்வை வெறுத்து வாடினாள். தன்அழகிய உருவை விடுத்து, ஈசனிடம் வேண்டி பேய் உருவை (எலும்பு வடிவம்) கேட்டுப் பெற்றாள். பின்னர் கயிலைமலையானை தரிசனம் செய்யப் புறப்பட்டாள் புனிதவதி. சிவன் இருக்கும் கயிலையில் காலால் நடப்பது குற்றம் என்றெண்ணி, தன் தலையால் நடந்து சென்றாள்.

ஈசனுடன் வீற்றிருந்த பார்வதிதேவி இதைக்கண்டு, ‘சுவாமி! பேய் உருவில் தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்?’ என்று வினவினார்.

அதற்குச் சிவபெருமான், ‘இவள் நம்மைப் பேணும் அம்மை!’ என்றார். தம்மை நாடி வந்த புனிதவதியைப் பார்த்து, ‘அம்மையே! நலமாக வந்தனையோ?. நம்மிடம் வேண்டுவது யாது?’ என்று கேட்டார்.

அகிலத்துக்கும் அம்மையப்பனாக விளங்கும் சிவபெருமானே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், புனிதவதியின் பிறந்த ஊர் காரைக்கால் என்பதாலும் புனிதவதி, ‘காரைக்கால் அம்மையார்’ என்று பெயர் பெற்றார்.

‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்ட ஈசனிடம், ‘ஐயனே! உம்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும். மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். எப்போதும் உமது திருவடியில் வீற்றிருந்து, உமது நாமம் பாடும் வரம் வேண்டும்’ என்று வேண்டினார் காரைக்கால் அம்மையார்.

அவ்வாறே வரம் அளித்தார் ஈசன். ‘அம்மையே! நீ பூலோகத்தில் ஆலவனம் உள்ள திருவாலங்காடு சென்று, அங்கு எமது திருவடியின் கீழ் இருந்து என்றும் பாடும் வரம் தந்தோம்’ என்று அருளினார். காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு புறப்பட்டார். திருவாலங்காடு முன்பாக உள்ள பழையனூர் வந்து சேர்ந்தார். அங்கிருந்து செல்ல அவருக்கு வழி தெரியவில்லை. ஒரே காடாக இருந்தது.

ஆகவே பழையனூரில் வீற்றிருந்த சிவபெருமானிடம் காரைக்கால் அம்மையார் வேண்டினார். ‘ஈசனே! ஒரே காடாக உள்ளது. எந்த திசையில் சென்று நான் திருவாலங்காட்டை அடைவது?’ என்று கேட்டார்.

அப்போது ஆலய கருவறையில் இருந்து ‘இங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்’ என்று அசரீரி ஒலித்தது. அவ்வாறே சென்றார் காரைக்கால் அம்மையார். அவருக்கு வழி தெரிவதற்காக வழிநெடுகிலும் சிவலிங்கமாக காட்சிக் கொடுத்தார் சிவபெருமான். ஆகையால் தலையால் நடந்து சென்று திருவாலங்காட்டை அடைந்தார் காரைக்கால் அம்மையார். அங்கு அம்மைக்கு, ஈசன் திருநடனம் காட்டினார். அதனை கண்டுக் களித்த காரைக்கால் அம்மையார், ‘திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்’ என்னும் இரண்டு பதிகங்களைப் பாடினார். இது பன்னிரு திருமுறையில் பதினொன்றாவது திருமுறையாக உள்ளது. ஆனால் இது தேவாரத்திற்கு முன்னதாக பாடப்பெற்றது.

தொடர்ந்து ஈசனடியில் அம்மை ஐக்கியமானார். காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோவில் உள்ளது. இத்தலத்தில் ஈசனின் திருநாமம் கைலாசநாதர். அம்பிகையின் திருநாமம் சவுந்தராம்பாள் என்பதாகும். காரைக்கால் அம்மையாரின் பொருட்டு ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியன்று ஈசன் அம்மைக்கு அளித்ததும், அம்மையார் ஈசனுக்குப் படைத்ததுமான மாங்கனியின் பெயராலேயே ‘மாங்கனித் திருவிழா’ இங்கு வெகுசிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக 4-ம் நாள் அதிகாலை 4 மணிக்கு, காரைக்கால் நகரத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்படும். அப்போது கயிலாசநாதர் ஆலயத்தின் வாசலில் ஈசனை உருவகித்து, தீபச் சுடர் ஒன்றை ஏற்றுவார்கள். அப்போது காரைக்கால் அம்மையார் கோவிலிலும் காரைக்கால் அம்மையாரை உருவகித்து தீபச் சுடர் ஒன்று ஏற்றப்படும். அந்த தீபச்சுடரை எடுத்துவந்து கயிலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஈசனின் தீபச்சுடரில் சேர்ப்பார்கள். ஆம்!காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் திருவடியில் சேர்வதைக் குறிப்பதாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

அமைவிடம்

சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் வழியாக 39 கிலோமீட்டர் தூரத்தில் காரைக்கால் அமைந்துள்ளது.

குகநாதீஸ்வரர் ஆலயம்

காரைக்காலைப் போன்றே கன்னியாகுமரியில் உள்ள மிகவும் பழமையான பார்வதி அம்மன் சமேத குகநாதீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆனி மாத பவுர்ணமி நன்னாளின் இரவில் ‘காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா’ ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு குகநாதீஸ்வரர் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தை வலம் வர, பின்னர் காரைக்கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி வலம்வர அதுசமயம் பக்தர்கள் மாங்கனி படைத்தும், இறைத்தும் வழிபட்டு ஈசனின் இன்னருள் பெறுகிறார்கள். 

மேலும் செய்திகள்