திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா ஆலோசனை கூட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2018-07-14 22:30 GMT
திருத்தணி,

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 3-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை 5 நாட்கள் ஆடிகிருத்திகை விழா நடைபெற உள்ளது. இதில் 3-ந் தேதி அஸ்வினி விழாவும், 4-ந்தேதி பரணி விழாவும், 5-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்கு மலர் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் பக்தியுடன் வழிபடுவார்கள்.

இந்தநிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் நேற்று சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். இதில் கோ.அரி எம்.பி., திருத்தணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன், கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட துறை சார்ந்த அலுவலர்கள், ஆடி கிருத்திகை விழாவையொட்டி தங்கள் துறையின் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விவரங்களை கலெக்டர் சுந்தரவல்லியிடம் தெரிவித்தனர்.

அதன் பிறகு ஆடி கிருத்திகை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு பஸ்கள் மற்றும் மினசார ரெயில்கள் ஏற்பாடு செய்வது, சிறப்பு தரிசன ஏற்பாடுகள் மற்றும் சேவைகள் அமைத்து தருவது, குடிநீர், பால் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்து தருவது, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சுந்தரவல்லி உரிய ஆலோசனைகள் வழங்கி, தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்