குணசீலம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம் 21-ந் தேதி தேரோட்டம்

குணசீலம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

Update: 2018-09-11 19:50 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம், குண சீலம் பிரசன்ன வேங்கடா சலபதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு பகவத் பிரார்த்தனையும், இரவு 7.15 மணிக்கு புண்யாக வாசனமும், இரவு 8 மணிக்கு மிருத்சங்கரஹணம், இரவு 8.30 மணிக்கு அங்குரார்ப்பணம், இரவு 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும் நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) 9.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் காலை, இரவு நேரங்களில் சாமி புறப்பாடு மற்றும் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், 14-ந்தேதி காலை சாமி புறப்பாடும், இரவு 7.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு அனுமந்த வாகனத்திலும் சாமி வீதி உலா வருகிறார்.

வருகிற 16-ந்தேதி இரவு 7.30 மணிக்கு கருட வாகனத்திலும், 17-ந்தேதி இரவு 7.30 மணிக்கு சேஷ வாகனத்திலும், 18-ந்தேதி யானை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறும். மேலும் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மூலவர் முத்தங்கி சேவையில் காலை 9 மணி முதல் சாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வருகிற 19-ந்தேதி மாலை 6.30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு புஷ்ப வாகனத்திலும், 20-ந் தேதி இரவு 7.30 மணிக்கு குதிரை வாகனத்திலும் சாமி எழுந்தருள்கிறார்.

20-ந்தேதி காலை 7 மணிக்கு சாமி வெண்ணை தாழி கிருஷ்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

வருகிற 21-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். 22-ந்தேதி மாலை 4 மணிக்கு ஆராதனை, திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது. வருகிற 23-ந்தேதி இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 23-ந்தேதியுடன் விழா முடிவடைகிறது. விழாவையொட்டி சாமி கண்ணாடி அறையிலும் தினமும் இரவு காட்சியளிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாக டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்