பட்டிவீரன்பட்டி அருகே வினோத திருவிழா: வாழைப்பழங்களை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய மக்கள்

பட்டிவீரன்பட்டி அருகே வாழைப்பழங்களை சூறையிட்டு கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா நடந்தது.

Update: 2019-01-17 22:15 GMT
பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இந்த கிராமத்தில் சோலைமலை அழகர்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 3-ந்தேதி வாழைப்பழம் சூறையிடும் வினோத திருவிழா நடத்தப்படுகிறது.

கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் வாழைப்பழங்களை சூறையிடுவார்கள். அதன்படி நேற்று மாலை சோலைமலை அழகர்பெருமாள் கோவிலில், வாழைப்பழ சூறையிடும் திருவிழா நடந்தது. இதையொட்டி கிராம மக்கள் தங்களுடைய வீடுகளில் பாத்திரங்கள், கூடைகளில் வாழைப்பழங்கள் வைத்து பூஜை செய்தனர்.

பின்னர் அதை ஆண்கள் மட்டும் தலையில் சுமந்தபடி மேளதாளம் முழங்க ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் சோலைமலை அழகர் பெருமாள் கோவிலை வந்தடைந்தது. அங்கு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கோவில் அருகே வாழைப்பழங்களை சூறையிடும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஆண்கள் தாங்கள் சுமந்து வந்த வாழைப்பழங்களை சூறையிட்டனர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாழைப்பழங்கள் சூறையிடப்பட்டன. அவ்வாறு சூறையிடப்பட்ட பழங்கள் தரையில் விழுந்தன. அதை பயபக்தியுடன் பெருமாளின் பிரசாதமாக எண்ணி பக்தர்கள் எடுத்து சென்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டிபோட்டு சூறையிட்ட பழங்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதில் சேவுகம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்