நீலமாலை: பெண்களால் சிறப்படைந்த ராம காவியம்

இந்தத் தொடரின் மூலமாக ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் சீதையின் தோழியான நீலமாலையைப் பற்றிப் பார்க்கலாம்.

Update: 2019-01-22 08:25 GMT
நீலமாலை மின்னலாக ஓடினாள்.

பார்ப்பவர் ‘நீலமாலையா’ என்று உணர்வதற்குள், கண் பார்வையில் இருந்து மறைந்தாள். உள்ளமும், உடலும் பூரிக்க சீதையைப் பார்க்கவும், சந்தோஷ விஷயத்தைச் சொல்லவும் பறந்து ஓடினாள்.

பொன்னின் ஜோதி போலவும், பூவின் நறுமணம் போலவும், அழகே தவமிருந்து அவளை அடைந்தது என்றும் சொல்லத் தக்க சீதை, முன்தினத்தில் இருந்து வாடி இருந்தாள்.

நீலமாலையின் தலைவி. பொறுமை, அன்பு மரியாதை போன்ற நற்குணங்கள் நிறைந்தவள். தேவ மாதர்களும் தம் கைகளை தலைக்கு மேல் தூக்கி வணங்கத் தக்கவள். சீதையின் அழகைக் கண்டவர், ‘தேவர்கள் போல் இமை மூடாத விழிகளைப் பெற்றிருந்தால், சீதையின் அழகை கண்கொட்டாமல் பார்க்கலாமே’ என்று ஏங்கும் அழகிய திருமேனி படைத்த சீதை, உருகு பொற்பாவையை ஒத்திருந்தாள்.

கன்னி மாடத்தில் தனக்குவமை இல்லாத தனித்த அழகுடைய சீதை, ராமனைக் கண்ட நொடியில் இருந்து அவனையே நினைத்து உருகிக் கொண்டிருந்தாள்.

அவளின் துன்பம் எதனால் ஏற்பட்டது என்று அறியாமல் தாதியரும், தோழியரும் மனம் கலங்கி வருந்தினார்கள். ‘கண்ணேறு பட்டதோ..’ என்று ஆலத்தி நீர் சுற்றினார்கள். எதிலும் சரியாகாத அவளின் நோயை, நீலமாலை மட்டுமே அறிவாள். வீதி வழியே விசுவாமித்திரருடன் சென்ற இளம்சிங்கம் ராமன் நினைவே அவளை வாட்டுகிறது என்று அவள் உணர்ந்திருந்தாள்.

‘நேற்று நீ கண்டவனே, இன்று வில் முறித்தவன்’ என்று சீதையிடம் முதலில் சொல்ல விரும்பினாள் நீலமாலை.

எத்தனை அற்புதமான நிகழ்ச்சி அது. ராமன் வில்லை எடுத்தது கண்டனர். இற்றது கேட்டனர்.

அதன் பேரொலி அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்தது. தேவர்கள் பூமாரிப் பெய்தனர். மேகங்கள் பொன் மழை பொழிந்தது. முனிவர்களின் வாழ்த்துக்கள் பரவியது. எங்கும் மக்கள் மகிழ்ச்சியினால் கூத்தாடினார்கள்.

நீலமாலையும் கூத்தாடினாள். கூந்தலில் இருந்த மலை அவிழ, கழுத்தில் இருந்த மணி மாலைகள் வான வில்லைப் போல் நிறம் பரப்ப, மின்னலைப் போல் சீதையைத் தேடி ஓடி வந்தாள்.

சீதையை அவள் தெய்வமாகப் பார்த்தாள். ‘திருமகளே வந்து தோன்றியிருக்கிறாள்’ என்று நம்பிய அவள், கண்ணீர் காய்ந்து வாடியிருக்கும் சீதையின் முகம் கண்டு துடித்தாள். அவள் துயரினை எப்படியாவது துடைக்க வேண்டும் என்று ஆழ்ந்த அன்பில் நினைத்தாள்.

சுயம்வர மண்டபத்தில் ராமன் தாடகையை வதம் செய்ததையும், தசரத மன்னனின் குலப் பெருமையையும், விசுவாமித்திரர் கூறக் கூற அவள் மனம் பூரித்தது.

யானை போன்ற கம்பீர நடையும், நீண்ட கைகளும், கால்களும் கொண்டு, இனிய முறுவலும், கனிவு நிரம்பிய கண்களுமாய், குருவின் உத்தரவை எதிர்பார்த்து பணிவுடன் நின்ற ராமனைப் பார்த்ததும் அவள் மனம் குதூகலித்தது.

‘இவனே, இவனே என் சீதைக்கு ஏற்றவன்’ என்று உள்ளம் உரக்கக் கூறியது. விசுவாமித்திர முனிவர் “ராமா! சென்று வில்லை எடுத்து நான் ஏற்று” என்று கூறியதும் கம்பீரமாய் நடந்து வந்த ராமன், வில்லை எடுத்ததை மட்டும் தான் மக்கள் கண்டனர். அடுத்து இடிபோல் வில் பலத்த ஒலியுடன் இற்று விழுந்ததை மட்டுமே கண்டனர்.

அடுத்த நிமிஷம் நீலமாலை அங்கு நிற்கவில்லை. துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்.

வழக்கம் போல் சீதையைச் சந்தித்தவுடன் அவளின் திருவடிகளை வணங்கவில்லை. மாறாக ஆடினாள். எல்லையற்ற மகிழ்ச்சியினால் கூத்தாடினாள். ஆரவாரம் செய்து பாடினாள். நிலை கொள்ளாமல் குதித்தாள்.

“நீலமாலை! உன்னிடம் ஏன் இன்று இவ்வளவு உற்சாகம்?” சீதை வியப்புடன் வினவினாள். “என்ன செய்தி என்று சொல் நீலமாலை.”

“தேவி, இந்த உலகம் முழுவதும் சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தசரதன் என்ற அரசனின் மகன் ராமன். மன்மதனை விடச் சிறந்த அழகு படைத்தவன். பாம்பணையில் துயில் கொள்ளும் பரந்தாமனைப் போன்ற ஆற்றல் பெற்றவன். தன் தம்பியோடும், விசுவாமித்திர முனிவருடனும் நம் நகருக்கு வந்துள்ளான்.” நீலமாலை கூறக் கூற சீதை பரபரப்படைந்தாள்.

தன் உள்ளம் புகுந்த அழகன்தான் அவனோ?

நீலமாலை, அவளின் பரபரப்பை ரசனையோடு நோக்கினாள்.

“தேவி! முனிவர் அவரின் சிறப்புக்களைக் கூறக் கூற, உங்களுக்கு ஏற்றவர் அவர்தான் என்று என் உள்ளம் துள்ளியது. ஆனால் சிவ தனுசை எடுத்து நாண் ஏற்ற வேண்டுமே?”

“பிறகு?” - இறுப்பு கொள்ள முடியாமல் சீதையிடம் இருந்து வெளிவந்தது வார்த்தை.

“தேவி! குருவின் கட்டளைக்கு காத்து நின்ற ராமன், அவர் கண் அசைத்ததும் கம்பீர நடை நடந்து வந்தார். தனுசை எடுத்தது மட்டும் தான் கண்டோம். ஆஹா அது வளைந்தது; ஒடிந்தது. அந்தப் பேரோசையில் உலகத்தின் தீமை எல்லாம் அழிந்தது. உன் துன்பமும் ஒழிந்தது.”

நீலமாலை சொல்லக் கேட்டு பூரிப்படைந்த சீதை சட்டென்று கவலையானாள். ‘நேற்று தான் வீதியில் கண்டவன் தான் இவனோ? இல்லை வேறு யாரோ?’

நீலமாலைக்கு அவளின் மனது புரிந்தது.

“தேவி! நீங்கள் உத்தம குலத்துப் பெண். சீரிய பண்புகள் நிறைந்தவர். ஒரு ஆசை உங்கள் உள்ளத்தில் உதித்தது என்றால், அதற்கு காரணம் இல்லாமல் இருக்காது. கற்பின் கனலாக விளங்கும் நீங்கள் இது வரை எந்த ஆடவரையும் கண்ணில் கண்டதில்லை; ஆசைப்பட்டதில்லை. இன்று ஒருவரைப் பார்த்த கணத்தில் ஆசைப்படுகிறீர்கள் என்றால், அவரே உங்களை கை பிடிக்கப் போகிறவர் என்று இறைவன் சூசகமாக உங்களுக்கு அறிவித்திருக்கிறார்.”

தோழியின் அன்பான சொல் சீதையை நெகிழ்த்தியது.

“நீலமாலை நீ சொல்வது உண்மையாகட்டும். அவர் இல்லை எனில் நான் உயிர் துறப்பேன்.”

“அப்படிச் சொல்லாதீர்கள் தேவி.” நீலமாலை தடுத்தாள். “உயிர் துறப்பது என்பது நம் கையில் இல்லை. சிந்தித்துப் பாருங்கள். நேற்று அரச வீதியில் முனிவருடன் சென்றது இரண்டு இளைஞர்கள். இன்று அவர்களே நம் அரண்மனைக்கு வந்து மூத்தவர் வில்லை உடைத்திருக்கிறார். மகாவிஷ்ணுவின் அவதாரம் அவர்.”

அதில் உள்ளம் தெளிந்தாள் சீதை.

“செந்தாமரைக் கண்ணனான திருமாலே அவர். அவருக்கெனப் பிறந்த திருமகள் நீங்கள். அவரே நீ. நீயே அவர்.” நெகிழ்வோடு கூறினாள் நீலமாலை.

தன் தோழியை உயிராக நேசித்த அவள், சீதை மனம் வாடுவதைப் பொறுக்க முடியவில்லை. இந்த நிமிஷமே ராமனை எதிரில் கொண்டு வந்து நிறுத்தி ‘இதோ உன் உள்ளம் கவர்ந்த கள்வன்’ என்று காட்ட இயலாமல் போனதை நினைத்துத் துடித்தாள்.

சஞ்சலம், குழப்பம், பயம் என்று சீதையின் உள்ளம் அலைபாய்வதை உணர்ந்தாள் நீலமாலை.

“தேவி, உன் உருவமும் அவரின் உருவமும் ஒத்துப் போகின்றன. ராமனின் அழகு கண்டவர், இமைக்க மறந்தனர். தோள் கண்டவர்கள் தோளை மட்டுமே கண்டனர். கமலன் போன்ற கழல் அணிந்த பாதம் கண்டவர்கள், அதை விடுத்து வேறு எதையும் பார்க்க விரும்பவில்லை. முழு உருவத்தையும் யார்தான் கண்டார்கள். அழகு.. தவம் இருந்து உன்னை அடைந்தது போல், வீரம்.. பெரும் தவம் இருந்து அவரிடம் குடி கொண்டுள்ளது. உன் இதயம் அவனே. உன் துயரத்தை விடு. இவனே அவன். அவனே இவன்”

நீலமாலையின் சொற்கள் தேனில் நனைத்து, சீதையின் உள்ளத்தில் இரங்கி குளிர்வித்தது. அதே போல் மறுநாள் முகூர்த்த நேரத்தில் கை வலையல்களைச் சரி செய்வது போல், ஓரக் கண்ணால் ராமனைக் கண்ட சீதை உள்ளம் பூரித்தாள். ராமனும் அவ்வாறே.

மனம் மகிழ்ந்த சீதை “நீலமாலை எனக்கு உயிர் கொடுத்த இன்னொரு தாய் நீ” என்று நன்றியுடன் கூறுகிறாள்.

நல்ல தோழிக்கு உதாரணம் நீலமாலை.

மேலும் செய்திகள்