இது ‘தனுசு’வின் கதை

கன்வ மகரிஷி, பிரம்மதேவரை நினைத்து பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார்.

Update: 2019-12-17 10:14 GMT
ன்வ மகரிஷி, பிரம்மதேவரை நினைத்து பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். அதனால் அவர்மீது புற்று வளர்ந்தது. அப்புற்றின் மீது மூங்கிலும் வளர்ந்தது. முனிவரின் தவத்தை மெச்சிய பிரம்ம தேவர், கன்வ மகரிஷியின் முன்பாகத் தோன்றி, அவருக்கு வேண்டிய வரத்தை அளித்தார்.

முனிவர் தவமியற்றிய போது வளர்ந்த மூங்கிலையும், அதன் சக்தியையும் தனது ஞானத்தால் உணர்ந்த பிரம்மதேவர், அந்த மூங்கிலைக் கொண்டு இரண்டு தனுசு (வில்)களை உருவாக்கினார். அவற்றுக்கு ‘பிநாகம்’, ‘சாரங்கம்’ என்று பெயரிட்டார்.

‘பிநாகம்’ என்னும் தனுசுவை சிவபெருமானுக்கும், ‘சாரங்கம்’ என்னும் தனுசுவை விஷ்ணுவுக்கும் கொடுத்தார். அதனால் தான் சிவபெருமானுக்கு ‘பிநாகபாணி’ என்றும், விஷ்ணுவுக்கு ‘சாரங்கபாணி’ என்றும் பெயர் வந்தது.

இரண்டு என்றாலே, ‘எது சிறந்தது?’ என்ற கேள்வி பிறப்பது இயல்புதானே. தேவர்களுக்கும் ‘இவ்விரு தனுசுகளில் எது சிறந்தது?’ என்ற கேள்வி உண்டானது. அதனால் சிவ தனுசுவிற்கும் விஷ்ணு தனுசுவிற்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நிலைக்குமேல் இப்போட்டி தொடர்ந்தால் இவ்வுலகிற்கே ஆபத்து என்ற நிலை ஏற்பட்டது. எனவே அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. இருப்பினும் சிவனின் கரபலத்தை தாங்க முடியாத சிவ தனுசுவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.

போட்டிக்குப் பிறகு பிநாகமான சிவ தனுசு, சீதையின் தந்தை ஜனகரின் முன்னோரான தேவரதருக்கு கிடைத்தது. அது அவர்களின் வழிவழியாக வந்து ஜனகரின் பாதுகாப்பில் இருந்தது. சாரங்கமான விஷ்ணு தனுசு பரசுராமரின் தாத்தா ரிட்ஷச முனி வருக்கு கிடைத்தது. அவரிடம் இருந்து வழி வழியாக பரசுராமரை வந்தடைந்தது.

ஜனகரிடம் இருந்த சிவ தனுசுவைத்தான், சீதையை மணப்பதற்காக சுயம்வரத்தின் ராமபிரான் உடைத்தார். சிவ தனுசுவை உடைத்ததால் பரசுராமர் மிகுந்த கோபமுற்று ராமபிரானுடன் போரிட முனைந்தார். ஆனால், ராமன் யார் என்பதை அறிந்த பிறகு, தன்னிடம் இருந்த விஷ்ணு தனுசுவை, ராமரிடமே ஒப்படைத்து விட்டார், பரசுராமர். ஆனால் ராமபிரான் அதை உபயோகிக்கவில்லை. அதை வருண பகவானிடம் கொடுத்து பாதுகாக்கும்படி கூறுகிறார்.

அந்த விஷ்ணு தனுசுதான், மகாபாரதத்தில் கதை நாயகனாக இருக்கும் கிருஷ்ணருக்கு கிடைக்கிறது. இந்த தனுசு மூலம்தான் நரகாசுரனுடன் போரிட்டு வெற்றி பெற்றார். கிருஷ்ணாவதாரம் முடியும்போது, அந்த விஷ்ணு தனுசு மீண்டும் வருண பகவானிடமே ஒப்படைக்கப்பட்டது.

சிவ தனுசு, விஷ்ணு தனுசு செய்து முடித்தபிறகும், மீதமிருந்த மூங்கிலைக் கொண்டு, பிரம்மதேவர் மூன்றாவதாக ஒரு தனுசுவை செய்தார். அதுதான் ‘பிரம்ம தனுசு’ என்னும் காண்டீபம். இத்தனுசு தேவர்களிடம் கைமாறி தேவர்கள் உலகத்தின் தலைவனான இந்திரன் மூலம் பாண்டவர்களின் ஒருவரான அர்ச்சுனனுக்கு கிடைத்தது.

108 நாண்களை உடைய இந்தத் தனுசுவின் கடைசி நாணை, யாராலும் அறுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. குருசேத்திரப் போர் முடிந்து பல ஆண்டுகள் கழித்து, அக்னி பகவானின் வேண்டு கோளுக்கிணங்க, காண்டீபத்தை வருண பகவானிடம் ஒப்படைத்தான், அர்ச்சுனன்.

*

‘வில்லிற்கு விஜயன்’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதாவது வில் வித்தை என்றாலே, விஜயன் என்று அழைக்கப்பட்ட அர்ச்சுனனையே குறிக்கும். மகாபாரதத்தில் பீஷ்மர், துரோணாச்சாரியார், கிருபர், அஸ்வத்தாமன், பரசுராமர் என பலர் இருந்தாலும் அர்ச்சுனனை மட்டுமே வில்லிற்கு உரியவனாகக் கூறுவர். ஆனால் விஜயமான தனுசுவையே தன் வசம் வைத்திருந்தவன் மாவீரன் கர்ணன்.

முருகப்பெருமான், தாரகாசூரனை வதம் செய்த பின்பு, அவனது மூன்று புதல்வர்களும் பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். பிரம்மனும் அவர்கள் முன் தோன்றி அவர்கள் வேண்டிய வரத்தை அருளினார். பல வரங்களை பெற்ற அந்த அசுரர்கள் தங்களுக்கென திரிபுரம் என்ற மூன்று நகரங்களை படைத்து, வழக்கம் போல் தேவர்களையும் துன்புறுத்தி வந்தனர்.

தேவர்களும் வரம் கொடுத்த பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர். பிரம்ம தேவரோ ஈசன் ஒருவரை தவிர, அவர்களை யாராலும் அழிக்க முடியாது என்று கூறினார். இதனால் தேவர்கள் அனைவரும் ஈசனை நாடினர். ஈசனும், தேவர்களுக்கு உதவ எண்ணினார். ஒரே அஸ்திரம் கொண்டு அசுரர்களை அழிக்க முடிவு செய்தார். அந்த அஸ்திரமாக விஷ்ணுவே மாறினார். அஸ்திரத்தின் நுனியில் அக்னி தேவரும், அடியில் வாயு தேவரும் இருந்தனர். இப்போது அசுரர்களை அழிக்கவல்ல அஸ்திரம் தயாரானது.

இருப்பினும் அந்த அஸ்திரத்தை தாங்கக்கூடிய தனுசு வேண்டுமல்லவா? ‘பிநாகம்’, ‘சாரங்கம்’, ‘காண்டீபம்’ என தெய்வீக தனுசுகள் இருந்தாலும், இந்த அஸ்திரத்தை தாங்கி எய்யும் அளவுக்கு அவற்றுக்குப் பலமில்லை. அதனால் இந்த அஸ்திரத்தை தாங்கும் தனுசை செய்வதற்கான பணியை விஸ்வகர்மா ஏற்றார். அதை சிரத்தையுடன் செய்தும் முடித்தார். அந்தத் தனுசுவிற்கு ‘விஜயம்’ என்று பெயரிட்டார். விஜய தனுசுவையும், தெய்வீக அஸ்திரத்தையும் கொண்டு ஈசன் திரிபுரத்தை எரித்து அசுரர்களை வென்றார். அசுர சம்ஹாரம் முடிந்ததும் விஜய தனுசுவை இந்திரனிடம் கொடுத்து பாதுகாக்கும்படி கூறினார்.

காலம் சென்றது. சத்திரியர்கள் சிலரின் தீய செயல்கள் அதிகமானது. ஆகவே, சத்திரிய இனத்தில் பரவியிருக்கும் தீமைகளை அழிக்க விஜய தனுசுவை பரசுராமரிடம் ஒப்படைக்கும்படி, இந்திரனுக்கு கட்டளையிட்டார், ஈசன். பரசுராமரும் விஜய தனுசுவை பெற்றுக்கொண்டு பல்வேறு காலநிலைகளில் தீய குணம் கொண்ட சத்திரியர்களை அழித்தார். கால ஓட்டத்தில் கர்ணன், பரசுராமரின் சீடரானான். கர்ணனின் திறமை, குருபக்தி, ஆற்றலைக் கண்டு வியந்த பரசு ராமர், தன்னிடமிருந்த விஜய தனுசை கர்ணனுக்கு அளித்தார்.

சிவபெருமானும், பரசுராமரும் ஏந்திய தனுசுவை பெற்றதும் கர்ணனுக்கு புது உத்வேகம் பிறந்தது. ஒரு கட்டத்தில் பரசுராமரிடம் சாபம் பெற்ற கர்ணன், அவரிடமிருந்து பெற்ற தனுசுவை பிரயோகிக்காமலே இருந்தான். கர்ணன் பலரிடம் போரிட்ட போதிலும் சரி, சில சந்தர்ப்பங்களில் அர்ச்சுனனிடம் போரிட்ட போதிலும் சரி, விஜய தனுசுவை பயன்படுத்தவே இல்லை. குருசேத்திர யுத்தத்தில் மட்டுமே பயன்படுத்தினான்.

விஜய தனுசுவின் நாணை எந்த ஒரு அஸ்திரத்தாலோ, தெய்வீக ஆயுதங்களாலோ அறுக்க முடியாது. இந்தத் தனுசுவில் இருந்து புறப்படும் அஸ்திரத்தின் சப்தம் இடியைப்போல இருக்கும். பல்லாயிரம் மந்திரங்களால் உருவேற்றப்பட்ட இந்தத் தனுசுவில் இருந்து ஒவ்வொரு முறையும் எய்யப்படும் அஸ்திரமானது, மிகுந்த சக்தியுடன் எதிரியை தாக்கும் வல்லமையுடையது.

இந்தத் தனுசுவை கையில் வைத்திருப்போரை எவராலும் வெல்ல முடியாது. அஸ்திரங்களில் வல்லமை மிக்க பிரம்மாஸ்திரம், பிரம்மசீரிசம் போன்ற அஸ்திரங்களால்கூட, இந்த தனுசை கையில் பிடித்திருப்பவரை வீழ்த்த முடியாது. கர்ணனின் கையிலிருந்த விஜய தனுசுவை பற்றி கிருஷ்ண பகவான் நன்கு அறிந்திருந்தார். அதனால்தான் அர்ச்சுனன், கர்ணனை குறைத்து கூறும்போதெல்லாம் “கர்ணனின் பலத்தை குறைத்து மதிப்பிடாதே” என்று எச்சரித்து வந்தார். குருசேத்திர போரில் அர்ச்சுனனுக்கும், கர்ணனுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, சாபத்தின் காரணமாக கர்ணனின் தேர்ச்சக்கரம் பள்ளத்தில் வீழ்ந்தது. அப்போது கையில் பிடித்திருந்த விஜய தனுசுவை தேரிலே வைத்துவிட்டு, தேர் சக்கரத்தை பள்ளத்தில் இருந்து மீட்க வந்தார் கர்ணன். அதைப் பயன்படுத்திதான் கர்ணனை, அர்ச்சுனன் வீழ்த்தினான். விஜய தனுசு, கர்ணனின் கையிலேயே இருந்திருந்தால், அர்ச்சுனனால் கர்ணனை வென்றிருக்கவே முடியாது.

பெரியகுளம் பேச்சிமுத்து

மேலும் செய்திகள்