குழந்தை வரம் தரும் கருங்குளம் வெங்கடாசலபதி

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கருங்குளம் வெங்கடாசலபதி கோவில், தென் திருப்பதி களுள் ஒன்றாக திகழ்கிறது. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கருங்குளம் வகுளகிரி சேத்திரத்தில் மலைமேல் ஆலயம் உள்ளது.

Update: 2020-02-28 11:46 GMT
ஒருபுறம் பாய்ந்தோடும் தாமிரபரணி, இக்கோவிலுக்கு மாலையாக அணி சேர்க்க, சுற்றிலும் சோலையாய் வாழை மரங்கள் பசுமையாய் நின்று மனதை கொள்ளை கொள்கிறது. மத்தியில் மிக ஒய்யாரமாய் வகுளகிரி சேத்திரம் காணப்படுகிறது.

இந்தக் கோவிலில் உருவமற்ற சந்தன கட்டையில் வெங்கடாசலபதி மூலவராக காட்சியளிக்கிறார். இந்த அமைப்பு அரியும் சிவனும் ஒன்று என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவது போல, தாமிர பரணி ஆற்றில் ஸ்ரீனிவாசர் இறங்கும் திருவிழா சித்ரா பவுர்ணமி தோறும் இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

வடநாட்டில் சுபகண்டன் என்ற அரசன் நல்லாட்சி புரிந்தான். மன்னனின் முன்ஜென்ம வினையால் அவனுக்கு கண்டமாலை நோய் உண்டானது. அதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், மன்னன் மிகவும் அவதிப்பட்டான். எத்தனை வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இறுதியாக திருப்பதி வேங்கட மலையானை தரிசித்து தீர்வு கேட்டு நின்றான். உண்ணாமல் வரம் கேட்டுக் கிடந்தான்.

அவனுக்கு அருள சித்தம் கொண்டார் ஏழுமலையான். அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றி, “சுபகண்டா.. சந்தனக் கட்டை கொண்டு, அதன் துண்டுகளை மிச்சமில்லாமல் எனக்கு ஒரு தேர் செய். தேர் செய்து முடியும் போது உனக்கு நல்லதொரு செய்தி சொல்கிறேன்” என்று கூறி மறைந்தார்.

இதையடுத்து, கைதேர்ந்த சிற்பிகளை கொண்டு, தேர் வேலை ஆரம்பித்தது. தேர் பணி முடிவுற்ற நிலையில், ஒரு சந்தன கட்டை மிஞ்சியது.

மனமுடைந்தான் சுபகண்டன், “இறைவா, மிச்சமின்றி கட்டைகளை கொண்டு தேர் செய்ய ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு கட்டை மிஞ்சுகிறதே. நான் என்ன செய்வேன்” என கலங்கித் துடித்தான்.

அன்று இரவு மீண்டும் மன்னன் கனவில் தோன்றிய ஏழுமலையான், “தென்னகத்தில் தாமிரபரணி கரையில் உள்ள வகுளகிரி சேத்திரத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள்புரிய உள்ளேன். எனவே அங்கே சென்று இந்த உருவமற்ற சந்தனக் கட்டையை பிரதிஷ்டை செய். அங்கே நான் அனைவருக்கும் அருள் புரிவேன். அங்கு உன் நோயும் தீரும்” என அருளினார்.

“இறைவா.. தென் திருப்பதியை எவ்வாறு கண்டறிவேன்” என்று மன்னன் வேண்ட, அதற்கும் இறைவன் பதிலளித்தாா். “இங்கு ஒரு பசுவும், கன்றும் தோன்றும். அதன் பின்னால் சந்தனக் கட்டையுடன் செல். பசுவும் கன்றும் எங்கு மறைகிறதோ, அங்கு என்னை பிரதிஷ்டை செய்” என்றார்.

அதன்படியே கருங்குளம் வகுளகிரி மலையை கண்டு, வெங்கடாசலபதி உறைந் திருக்கும் உருவமற்ற சந்தனக் கட்டையை மன்னன் பிரதிஷ்டை செய்தான். பின்னர் அதற்கு பால், நெய், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகங்களைச் செய்தான். என்ன ஆச்சரியம்.. மன்னனின் நோய் தீர்ந்தது. முன்பிருந்ததை விட கூடுதல் தேகப் பொலிவோடு, தன் நாட்டிற்குத் திரும்பினான். பல ஆண்டுகள் அபிஷேகம் நடந்தும், தற்போது வரை அந்த சந்தனக் கட்டை எந்தவொரு சேதமும் இன்றி காணப்படுவது இறைவனின் அருள் அன்றி வேறென்ன..



ஒரு சமயம் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலைக் காண, நாரதர் வருகை தந்தார். ஆனால் அவரை அங்கே காணவில்லை. எங்கு சென்றிருக்கிறார் என்று நாரதர், தன்னுடைய ஞானக் கண் கொண்டு தேடினார். அப்போது திருமால் தாமிரபரணி நதிக்கரையில் கருட வாகனத்தில் லட்சுமியோடு வீற்றிருக்க, ஆதிசேஷன் மலையாக விளங்க, தேவர்களும், முனிவர்களும் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தனர். அதைக்கண்டு மனம் மகிழ்ந்த நாரதர், தானும் அங்கு சென்று பகவானை வணங்கினார்.

இந்த ஆலயத்தில் உள்ள அபூர்வ புளிய மரத்தினை ‘உறங்கா புளிய மரம்’ என்று அழைக்கிறார்கள். இந்த புளியமரத்தில் பூ பூக்கும்; ஆனால் காய் காய்க்காது. ராத்திரி தன் இலைகளை மூடாது. இந்த புளிய மரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் தவம் செய்த புளியமரத்திற்கு இருக்கும் சிறப்பு, இவ்விடத்தில் இருக்கும் புளியமரத்துக்கும் உண்டு.

வகுளகிரி மலை மீது ஏறி வெங்கடாசலபதியை வணங்கும் முன்பு, பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள மார்தாண்டேஸ்வரரை வணங்க வேண்டும். மேலும் அங்கு தம்பதிகள் சகிதமாக அருளும் நவக்கிரகங்களை சேவித்து விட்டுதான், முன்பக்க படி வழியாக ஏறிச் சென்று வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

வெங்கடாசலபதிக்கு சாயரட்சை என்னும் சாயங்கால பூஜையில், அரிசியின் மேல் தேங்காய் உடைத்து வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி (நீராஞ்சனம்) பூஜை நடத்தினால் நினைத்த காரியம் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும், அரசு வேலை கிடைக்கும், இழந்த பொருளை மீட்கலாம். நாள்பட்ட நோய் தீருகிறது. இந்த பூஜைக்காக எப்போது பக்தர்கள் வந்தாலும் அர்ச்சகர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவார்கள். தென்திருப்பதிகளுள் ஒன்றாக திகழும் கருங்குளம் வெங்கடாசலபதிக்கான நேர்ச்சையை திருப்பதியில் செய்ய இயலாது. ஆனால் திருப்பதிக்கு செய்ய வேண்டிய நேர்ச்சையை கருங்குளம் வெங்கடாசலபதி கோவிலில் செய்யலாம் என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடசேவை மிகச்சிறப்பாக நடை பெறும். இரவு 11 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கருட வாகனத்தில் உற்சவர் ஸ்ரீனிவாசர், கிரிவலம் வருவார். இந்த வேளையில் பக்தர்கள் “கோவிந்தா, கோபலா” என கோஷமிட்டபடி அவர் பின்னால் சுற்றி வருவார்கள்.

கருங்குளத்தில் சித்ரா பவுர்ணமி விழா 10 நாள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பகவான் கிரிவலம் வருவார். இறுதி நாள் மலையை விட்டு கீழ் இறங்கி, அதிகாலை தாமிரபரணி ஆற்றில் மீன் விளையாட்டு விளையாடுவார். மறுநாள் மலை மீது பச்சை சாத்தி, ‘கோவிந்தா..’ கோஷம் முழங்க மலை மீது ஏறுவார். இந்த நிகழ்வுகளைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த நிகழ்ச்சி மதுரையில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சிக்கு இணையானதாகும்.

சந்திர கிரகணம் நடைபெறும் நேரங்களில், சித்திரா பவுர்ணமி வரும் காலங்களில் பகல் வேளையிலேயே உற்சவர் ஸ்ரீனிவாசர், மலையை விட்டு கீழே இறங்குவார். இந்த அபூர்வ காட்சி எப்போதாவது தான் நடை பெறும். வைகுண்ட ஏகாதசி திருவிழா இக்கோவிலில் மிக சிறப்பாக நடக்கும். இக்கோவிலில் பரமபத வாசல் என தனியாக கிடையாது. எனவே பிரதான வாசல் வழியாகவே பகவான் சொர்க்கவாசலுக்கு செல்வார். இக்கோவிலில் லட்சார்ச்சணை விழா, மகா சாந்தி ஹோமம் வருடந்தோறும் மிகச்சிறப்பாக நடக்கிறது.

கோவில் மூலவராக உருவமற்ற சந்தனக் கட்டையில் உள்ள வெங்கடாசலபதி வீற்றிருக் கிறார். உற்சவர் ஸ்ரீனிவாசர், தாயார் ஸ்ரீதேவி - பூதேவியுடன் காட்சியளிக்கிறார். மூலக் கோவிலிலும் தம்பதி சகிதம் வெங்கடாசலபதி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றியுள்ள நவ திருப்பதிகளை தரிசிக்கும் முன்பு கருங்குளம் வெங்கடாசலபதி என்னும் தென் திருப்பதி தலத்தினை தரிசிப்பது மிக முக்கியமாகும். படி வழியாக நடந்து ஏறிச்செல்ல முடியாதவர்களுக்கு, கோவிலின் பின் புறம் வழியாக வாகனங்கள் மலை மீது ஏறிச்செல்ல சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.

அமைவிடம்

நெல்லை - திருச்செந்தூர் பிரதான சாலையின், 15-வது கிலோமீட்டர் தூரத்தில் கருங் குளம் வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்துள்ளது.

- முத்தாலங்குறிச்சி காமராசு

மேலும் செய்திகள்