வாமன அவதாரத் திருத்தலம்

கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின், வரலாற்றைச் சொல்லும் இடமாக ‘திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்’ விளங்குகிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று குறிப்பிடும் 10 அவதாரங்களில், வாமன அவதாரத்திற்குரிய தலமாக கேரள மக்களால் வழிபடப்படும் ஆலயம் இது.

Update: 2021-08-17 10:29 GMT
அசுர குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கேரளநாட்டை ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களின் மீது பற்றுகொண்டவனாக இருந்தான். இந்த மன்னனை, வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், மூன்றடி மண் கேட்டு பாதாள உலகத்திற்குள் தள்ளிய இடத்தில் திருக்காட்கரை ஆலயம் அமைந்திருப்பதாக சிலர் சொல்கின்றனர்.

மகாபலி சக்கரவர்த்தி காலத்திற்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவின் வாமன தோற்றத்தைப் பார்க்க விரும்பினார். இதையடுத்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, இறைவன் வாமன தோற்றத்தில் காட்சியளித்த இடமே இந்த ஆலயம் இருக்கும் பகுதி என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இந்தக் கோவிலில் கபில தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டே, இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் பெருமாள் வாமன அவதாரத் தோற்றத்தில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கிய நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் இத்தல இறைவன், ‘திருக்காட்கரையப்பன்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘வாத்சல்யவல்லி’ என்பதாகும். இதற்கு ‘பெருஞ்செல்வ நாயகி’ என்று பொருள். இந்த ஆலயத்தில் பகவதி அம்மன், சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்ம ராட்சசன், யட்சி ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலய இறைவனை போற்றி, நம்மாழ்வார் 10 பாசுரங்கள் பாடியிருக்கிறார். குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்பு பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி வழிபடுகிறார்கள். திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழைப் பழங்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் அரச மரம் ஒன்று உள்ளது. இதன் வேர் பகுதி பிரம்மா என்றும், நடுப்பகுதி விஷ்ணு என்றும், மேல் பகுதி சிவபெருமான் என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மரத்தை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கிறார்கள். மரத்தடியில் மேடை கட்டி, அதில் மாட விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆயில்ய நட்சத்திர நாளில் இங்கு பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாக இன பழங்குடி மக்கள் ‘புல்லுவன்’ என்ற பாடலை பாடுகிறார்கள்.

பழமையான சிவாலயம்

ஆலயத்தின் பின்புறம் ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்ற சிவாலயம் உள்ளது. இங்கு மகாபலி சக்கரவர்த்தி நிறுவி வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. திருக்காட்கரையப்பன் கோவிலைவிடவும், இந்த சிவாலயம் மிகவும் பழமைவாய்ந்தது. சிவன் கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வருபவர்கள், முதலில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னரே இங்கு வந்து வாமனரை வழிபடும் வழக்கம் இருக்கிறது. வாமனருக்கு பால்பாயசமும், சிவபெருமானுக்கு நெய் பாயசமும் படைக்கப்படுகிறது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரை என்ற இடத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. திருச்சூரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது, திருக்காட்கரை திருத்தலம்.

மேலும் செய்திகள்