உப்பின்றி உணவருந்தும் உப்பிலியப்பன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்குள்ள நாகநாதசுவாமி ஆலயத்தின் அருகில், உப்பிலியப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பை இங்கே பார்க்கலாம்.

Update: 2022-01-25 05:58 GMT
சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 13-வது தலமாக திகழ்கிறது.

நம்மாழ்வாருக்கு இந்த ஆலயத்தில், திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய ஐந்து கோலங்களில் பெருமாள் காட்சி தந்தருளினார். இதில் முத்தப்பன் சன்னிதி இப்போது இல்லை.

உப்பில்லாத நைவேத்தியங்களை ஏற்பதால், ‘உப்பிலியப்பன்’என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் இத்தல பெருமாளுக்கு பெயர் வந்தது.


இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, 12 ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர்களான, நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கருவறையில் நின்ற கோலத்தில் உப்பிலியப்பனை தரிசிக்கலாம். அவருக்குவலது புறத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பூமாதேவியும், இடதுபுறத்தில் மார்க்கண்டேயரும் காட்சி தருகின்றனர்.

பாதம் நோக்கியபடி இருக்கும் மூலவரின் வலது கரத்தில் ‘மாம் ஏகம் சரணம் விரஜ’ என்று எழுதப்பட்டிருக்கும். கீதை உபதேசமான இதற்கு, ‘என்னை சரணடைபவர்களை காப்பேன்’ என்பது பொருள்.

பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு இடதுபுறத்தில்தான் பூமாதேவி இருப்பார். பூமாதேவியை பெருமாள் மணம் முடித்த தலம் இது என்பதால், இறைவனுக்கு வலதுபுறத்தில் தாயார் இருக்கிறார். தன் மகளாக அவதரித்த பூமாதேவியை, பெருமாளுக்கு மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது, ‘மகளை ஒருபோதும் பிரியக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். எனவே உற்சவ காலங்களில் கூட, பெருமாள் தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.

திருமால், மார்க்கண்டேயரிடம் பெண் கேட்டுவந்தது ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரம் ஆகும். பெருமாள், பூமாதேவி திருமணம், ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் நடந்தது. எனவே இந்த ஆலயத்தில் ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் இறைவனுக்கு, சாம்பிராணிதூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை தரிசித்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு இருப்பது போல, தனி சுப்ரபாதம் இத்தல உப்பிலியப்ப பெருமாளுக்கு உண்டு.

மார்க்கண்டேயர் வழிபாடு செய்த திருத்தலம் என்பதால், இங்கு ஆயுள் விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது.

ஆவணி திருவோண நட்சத்திரம் அன்று, காலையில் பெருமாள்கருட வாகனத்தில் ‘உதய கருட சேவை’ புரிவார். பின் ‘தட்சிண கங்கை’ என்று அழைக்கப்படும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுவார். தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெறும்.

தல வரலாறு

மார்க்கண்டேய மகரிஷிக்கு மகளாக துளசி செடியின் கீழ் பூமாதேவி அவதரித்தாள். அவளுக்கு ‘துளசி’ என்று பெயரிட்டு வளர்த்தார், மார்க்கண்டேயர். திருமண வயது வந்ததும், திருமால் ஒரு வயோதிகர் வடிவில் வந்து துளசியை பெண் கேட்டார். மார்க்கண்டேயர் மறுத்துவிட்டார். ஆனாலும் முதியவர் வேடத்தில் வந்த பெருமாள் விடவில்லை. அப்போது மார்கண்டேயர் “என் மகள் சிறு பெண். அவளுக்கு உணவில் சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது. அப்படிப்பட்ட பெண்ணை நீங்கள் மணம் முடிப்பது சரியாக இருக்காது” என்றார். அதற்கு முதியவராக வந்த பெருமாள், “உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக்கொள்கிறேன்” என்றார். அவரது உறுதியைக் கண்டு, வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தனது மகளை பெருமாளுக்கு மணம் முடித்துக் கொடுத்ததாக தல வரலாறு சொல்கிறது.

மேலும் செய்திகள்