திருவாரூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி விழா
ராம அவதாரத்தில் ராமனுக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான் குரங்கு உருவம் எடுத்து வாயுபுத்திரன் அனுமனாக அவதரித்ததாக ராமாயண புராணக்கதையில் கூறப்பட்டுள்ளது. அனுமன் பிறந்த நாளே மார்கழி மாதம், அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிவரும் அனுமன் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. அனுமன் பிறந்தநாளன்று அவருக்கு விரதம் இருந்து அவரை வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெருகும் என்பது ஐதீகம்.
அதன்படி நேற்று அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அருகில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் யாகசாலை பூஜையுடன், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கமலாலயம் மேல்கரையில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவில், வடக்கு வீதியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கீழவீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி நேற்று விஸ்வரூப ஆஞ்சநேயர் மஞ்சள் பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கிருஷ்ணா நந்த தீர்த்த சுவாமிகள் முன்னிலையில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும், சீதா கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், சந்தானராமர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவில், செட்டிசத்திரம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. முன்னதாக வீர ஆஞ்சநேயர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வலங்கைமான்
வலங்கைமான் தெற்கு அக்ரஹாரம் பகுதி திருமதுபான ராமசாமி கோவிலில் உள்ள வீணா கானா ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கோதண்டராமர் கோவில், வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள ராமபவன ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. முன்னதாக அனைத்து கோவில்களிலும் ஆஞ்சநேயர் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடியில் ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், வில்வபொடி, மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வடமாலை, அருகம்புல், எலுமிச்சை, துளசி மாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.