பழமையான திருமூலநாதர் ஆலயம்

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, பேரங்கியூர் என்ற கிராமம்.;

Update:2022-11-08 21:54 IST

இங்கு திருமூலநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. கி.பி. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை, பராந்தகச் சோழன் கட்டியதாக கல்வவெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. மேலும் ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன், குலோத்துங்கன் ஆகியோரது கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகிறது.

கருங்கல்லால் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் உள்ள மூலவர், 'திருமூலநாதர்' என்றும், 'மூலஸ்தானமுடையார்' என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையில் வீற்றிருக்கும் இறைவன், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம், 'அபிராமி அம்மை' என்பதாகும். கோபுரங்கள் எதுவும் இன்றி கோவில் காணப்படுகிறது. கோவில் கருவறை கோஷ்டத்தில் உள்ள விநாயகர் வித்தியாசமான தோற்றத்தில் அருள்கிறார். பொதுவாக விநாயகப் பெருமான், கும்பம், பாசக் கயிறு, சில ஆயுதங்கள் தாங்கி காட்சி தருவார். ஆனால் இங்குள்ள விநாயகர், சிவபெருமானைப் போல, தன்னுடைய கரங்களில் மான் மற்றும் மழு தாங்கி காட்சியளிக்கிறார்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தியும் வித்தியாசமாக காணப்படுகிறார். இவர் பீடத்தின் மீது சற்றே இடது பக்கமாக சரிந்து அமர்ந்த நிலையில் வலது காலை தொங்க விட்டும், இடது காலை வலது காலின் மீது தூக்கி வைத்தும் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் சாண்டி தேவி, வராகி அம்மன், விஷ்ணு துர்க்கை, ஜோஷ்டா தேவி உள்பட பல்வேறு தெய்வ திருமேனிகள் இருக்கின்றன.

திருமூலநாதர் கோவில், மூலவர் சன்னிதி மற்றும் அர்த்த மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோவில்களின் உச்சியில் மகர தோரணங்கள் அலங்கரிக்கின்றன. கருவறையின் மேற்குப் பக்க சுவரில் ஒரு அளவு கோல் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 365 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த அளவையானது, சோழர் காலத்தில் நிலம் அளக்க இருந்த அளவுகோல் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்