ஆஷஸ் டெஸ்ட்: மீண்டெழுமா இங்கிலாந்து..? முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 82 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

Update: 2021-12-27 07:53 GMT
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில், நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் மார்கஸ் ஹாரிஸ் 76 ரன்கள் எடுத்தார். 

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராபின்சன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.ஸ்டோக்ஸ் மற்றும் லீச் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை ஆடத் தொடங்கியது.இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. கேப்டன் ஜோ ரூட் 12 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். 

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டார்க் மற்றும் போலன்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி இன்னும் 51 ரன்கள் பின்தங்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்