கலவர பூமியாக மாறிய மைதானம்! கால்பந்து போட்டியில் ரசிகர்களிடையே கைகலப்பு.. 22 பேர் படுகாயம்!!
ரசிகர்கள் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.;
மெக்சிகோ சிட்டி,
2022 கிளாசுரா கால்பந்து தொடரின் ஒன்பதாவது சுற்று போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்று வருகின்றன. நேற்று குரேடாரோ நகரில் உள்ள லா கொரேகிடோரா மைதானத்தில், குரேடாரோ-அட்லஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் போது திடீரென கலவரம் ஏற்பட்டது, போட்டியின் 63வது நிமிடத்தில் ரசிகர்களுக்கு இடையே சண்டை மூண்டது.
பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள், தங்களுக்குள் ஒருவரையொருவர் மாறி மாறி கடுமையாக தாக்கி கொண்டனர். இதனையடுத்து ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக பாதுகாவலர்கள் மைதானத்தின் கதவுகளைத் திறந்தனர். ஆனால், சிலர் வெளியேறுவதற்கு பதிலாக தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டனர்.
அதில் 22 பேர் காயமடைந்தனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிகப்பட்டது. ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் மைதானம் முழுவதும் கலவர பூமியாக காட்சியளித்தது.
இதனையடுத்து போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வீரர்கள் பாதுகாப்பாக அவர்கள் தங்கும் அறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.