டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவின் சாதனையை சமன் செய்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.;

Update:2022-03-06 13:01 IST
மொகாலி,

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175  (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட் 96 ரன்களில் சதத்தை நழுவவிட்டார். 100 ஆவது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி  45 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 65 ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பேட்டிங்கில் ஜொலித்த ஜடேஜா பந்துவீச்சிலும் தனது மாயாஜாலத்தை காட்டினார். அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து உணவு இடைவேளைக்கு பின்னர், இலங்கை அணி பாலோ-ஆன் அடைந்து, இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. 

இந்த நிலையில், இலங்கை பேட்ஸ்மேன் பதும் நிசங்கா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரான கபில் தேவின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்.

மேலும், இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.

மேலும் செய்திகள்