கன்னி: புத்தாண்டு ராசிபலன் 2026: வீடு, மனை, வாகன யோகத்தை வழங்கும் ஆண்டு..!

திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த புத்தாண்டில் நல்ல செய்திகள் வந்து சேரும்.;

Update:2025-12-21 12:06 IST

கன்னி

குரு உச்ச பலம் பெறுவதால்

கன்னி ராசியினர் தங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பலனை பெற்று தரும் ஆண்டாக ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். 4-ம் இடத்தில் திக்பலமாக உள்ள பாக்கியாதிபதி சுக்கிரன், ராசி அதிபதி புதனோடு இணைந்து குருவின் பார்வை பெறுவது கன்னி ராசியினருக்கு வீடு, மனை, வாகனம் ஆகிய யோகத்தை வழங்குகிறது. உங்கள் ஆலோசனைகள் பலரது நல்வாழ்விற்கு உறுதுணையாக அமையும்.

ஆண்டின் பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடையும் குரு உச்ச பலம் பெறுவதால் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்கள் கை கூடி வரும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்கள் வெற்றி பெறுவார்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை கிடைக்கும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் பொது விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

குடும்பம், நிதிநிலை

குடும்ப நிலையை பொறுத்தவரை கணவன் மனைவி உறவுகளுக்குள் சில சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த புத்தாண்டில் நல்ல செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.

ஆண்டின் பிற்பகுதியில் வருமானம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். நிலுவையில் நின்ற கடன்கள் வசூல் ஆகும். ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் திட்டமிட்டு முதலீடுகளை செய்யலாம். பழைய கடன்கள் ஏதாவது இருந்தால் அதை முற்றிலுமாக திருப்பி செலுத்துவதற்கு இது நல்ல தருணம். எந்த ஒரு முதலீட்டையும் தெளிவாக திட்டமிட்ட பிறகே செய்ய வேண்டும். அவசரம் கூடாது.

தொழில், உத்தியோகம்

ஆடிட்டிங், டேட்டா அனலைசிஸ், மென்பொருள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல காலம். உங்களுடைய தனித்திறன்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும். பலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும். சிறிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பெரு நிறுவனங்களில் பணியாற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை துறையினருக்கும் இது சாதகமான காலம்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். அதை மனதில் கொண்டு செயல்படுங்கள். தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு நிர்வாகத்துடன் எதிர்பார்த்த நெருக்கம் ஏற்படும்.

கலை, கல்வி

சினிமா, தொலைக்காட்சி, இசை போன்ற கலைத்துறையினருக்கு குருவின் சஞ்சாரம் காரணமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட முயற்சிகளை விட கூட்டாக சேர்ந்து செயல்படும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதனால் எந்த ஒரு விஷயத்திலும் பலரும் ஒன்றாக சேர்ந்து முயற்சித்தால் வெற்றி உறுதி.

மாணவர்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டு வளர்ச்சி சீராக இருக்கும். நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்களை வெளிப்படுத்தும் ஆண்டு இது. போட்டித் தேர்வுகள் மற்றும் உயர் கல்விக்கான முயற்சிகளில் பலரும் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு செல்வார்கள். வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் கல்வி பெற விரும்புபவர்களுக்கு முயற்சி கைகூடும்.

நன்மைகள் நாடி வர..

அதிகப்படியான வேலை மற்றும் பல சிந்தனைகள் காரணமாக மன அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். பலருக்கு தூக்கம் சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படலாம். அப்படிப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

இயன்ற போதெல்லாம் ஆடுகள் அல்லது பசு மாடுகளுக்கு பசுமையான தீவனங்களை உண்பதற்கு வழங்கலாம். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு பச்சை நிற வஸ்திரங்களை தானமாக கொடுப்பதும் நன்மை பல தரும். ஏழை, எளியவர்கள், பணியாளர்கள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். முடிந்தவரை மௌன விரதம் இருப்பதும், மாதம் ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதும் முக்கியம்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்

Tags:    

மேலும் செய்திகள்