ரிஷபம்: புத்தாண்டு ராசிபலன் 2026: லாப ஸ்தானத்தில் சனி.. எப்படி இருக்கும் இந்த ஆண்டு..?
பேஷன் டெக்னாலஜி, எழுத்து மற்றும் திரை உலகத்தினருக்கு பல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் ஆண்டு இது.;
ரிஷபம்
லாப ஸ்தானத்தில் சனி..
ரிஷப ராசியினருக்கு நீண்ட நாட்களாக மனதில் நினைத்த விருப்பங்கள் நிறைவேறும். வருடத்தின் பிற்பகுதியில் திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும். லாப ஸ்தானத்தில் சனி, தன ஸ்தானத்தில் குரு உள்ள நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. அதனால், நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான குடும்ப மற்றும் பொருளாதார முடிவுகளை இந்த ஆண்டு மேற்கொள்வீர்கள்.
உங்கள் தனிப்பட்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சீராக பராமரித்து வர வேண்டும். பல விஷயங்களில் உங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்வது அவசியம். தொழில் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். இடமறிந்து பேசுவது அவசியம்.
குடும்பம், நிதிநிலை
கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். வாழ்க்கைத் துணையின் உடல் மற்றும் மன நலம் குறித்து அக்கறை கொள்ளுங்கள். குடும்பத்தின் மீது அக்கறை உள்ள அளவிற்கு உங்கள் மனதில் அமைதி ஏற்படும். எதையும் வெளிப்படையாக பேசி நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். புதுமண தம்பதியருக்கு சுபச் செய்திகள் வந்து சேரும்.
நிதி நிலையை பொறுத்தவரை ஆண்டின் முற்பகுதியில் பல்வேறு செலவுகள் ஏற்படலாம். பிற்பகுதியில் அதற்கு ஏற்ற வருமானம் வந்து சேரும். நீண்ட கால முதலீடுகளை செய்வதற்கு இது நல்ல நேரம். வீடு மனை நிலம் வாங்குபவர்கள் ஆவணங்களின் உண்மை தன்மையில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற கடன்களை கண்டிப்பாக வாங்கக் கூடாது. பின்னால் அது சிக்கலாக மாறிவிடலாம்.
தொழில், உத்தியோகம்
தொழில் துறையினருக்கு இது நல்ல ஆண்டு. வியாபாரிகளுக்கு இது பொற்காலம் என்று சொல்லலாம். புதிய பங்குதாரர்கள், தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வார்கள். வெளி மாநில, வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வர்த்தகம் பெருகும். தொழில் அல்லது வியாபாரத்தில் பிறரது தேவையற்ற ஆலோசனைகளை தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும். உழைப்புக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும் ஆண்டு இது. அதே சமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உத்தியோக ரீதியாக வெளிநாட்டு பயணங்கள் அல்லது தொடர்புகள் ஏற்படும்.
கலை, கல்வி
கலைத்துறையினருக்கு இது ஒரு சாதகமான ஆண்டு. ஃபேஷன் டெக்னாலஜி, எழுத்து மற்றும் திரை உலகத்தினருக்கு பல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். புதிய படைப்புகள் மூலம் பொதுமக்களிடையே ஆதரவு பெருகும். பெண்கள் பல சாதனைகளை செய்வார்கள். துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய ஆண்டு இது.
கல்வியை பொறுத்தவரை மாணவர்கள் வழக்கத்தை விட கவனமாக படிக்க வேண்டும். தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்ட உழைப்பு மிக அவசியம். வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைகூடி வரும். அரசு போட்டித் தேர்வுகளில் தொடர்ந்த முயற்சிகள் அவசியம்.
நன்மைகள் நாடி வர..
காதுகளில் பிரச்சினை, ஹார்மோன் குறைபாடு ஏற்படலாம். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு, முதுகு வலி, தொழில்-வர்த்தக இலக்குகளை அடைய வேண்டும் என்ற மன அழுத்தமும் ஏற்படலாம். இனிப்பு உண்பதை குறைத்துக் கொள்ளவும். அதிகாலை நடை பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் ஆகியவை அவசியம்.
உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் முதியோர்களுக்கு இரவு உணவு வழங்குவது நல்லது. அதன் மூலம் பல தடைகள் விலகும். அருகில் உள்ள பெண் தெய்வ கோவில்களுக்கு கருவறையில் தீபம் ஏற்ற நெய் வழங்குவதும், முடிந்த போதெல்லாம் வெண்மை நிற மலர் மாலைகளை சமர்ப்பணம் செய்வதும் முயற்சிகளில் வெற்றி பெற உதவும். இஷ்ட தெய்வ மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்தால் வெற்றி நிச்சயம்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்