தனது தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த நடிகை மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் தனது தாயுடன் சமீபத்தில் பாரிஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுவந்தார்.;
பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்,மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். தற்போது, இவரது நடிப்பில் வெளியான 'ஹிருதயபூர்வம்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், தமிழில் 'சர்தார் 2', தெலுங்கில் 'தி ராஜா சாப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மாளவிகா மோகனன், சமீபத்தில் பாரிஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுவந்தார். இந்த முறை தனது தாயையும் அழைத்தச் சென்றார். அது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த பயணம் குறித்து அவர் கூறும்போது, “பத்து வருடங்களுக்கு முன்பு நானும் என் அம்மாவும் பாரிஸுக்கு வந்திருந்தோம். ஆனால் அப்போது மழை சீசன் என்பதால் எங்கேயும் வெளியே செல்ல முடியாமல் இரண்டு நாட்கள் ஹோட்டலிலேயே அடைந்து கிடந்தோம். அப்போது பாரிஸை சுற்றி பார்க்க முடியவில்லை என்கிற மனக்குறை என் அம்மாவுக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அதனால் தான் இந்த முறை அவரை பாரிஸுக்கு அழைத்து வந்து அவருக்கு பல இடங்களை சுற்றி காட்டினேன். எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இதுபோன்ற பயணம் மேற்கொள்ள தயங்குவதில்லை” என்று கூறியுள்ளார்.