போதைப்பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது- நடிகர், நடிகைகளுக்கு வினியோகம் செய்தாரா?

கைதான சர்புதீன், சரத் இருவரையும் திருமங்கலம் போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர்.;

Update:2025-12-08 07:41 IST

திருமங்கலம்,

சென்னையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தியதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் கடந்த 20-ந் தேதி கைது செய்தனர். அப்போது சர்புதீனின் காரில் இருந்து ரூ.27.91 லட்சம், சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி. கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் கைதான சர்புதீன், சரத் இருவரையும் திருமங்கலம் போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், சர்புதீன் ஏற்கனவே நடிகர் சிம்புவுக்கு மேலாளராக பணியாற்றியவர் என்பதும், பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கம் உடையவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் சர்புதீன் கொடுத்த தகவலின்பேரில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் என்பவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தினேஷ்ராஜ், சர்புதீனிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.‘சினிமா’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய தினேஷ் ராஜ், ‘பிளாக் மெயில்’என்ற படத்தை வினியோகம் செய்துள்ளார். நடிகர் தனுஷின் உறவினர் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதும் தெரியவந்தது.

கைதான தினேஷ்ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவருடன் தொடர்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் யாருக்கும் அவர் போதைப்பொருள் வினியோகம் செய்தாரா? என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும். தினேஷ் ராஜ், ‘பிரிமியர் புட்சால் இந்தியா’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். பிரபல கால்பந்து வீரர்களை வைத்து கால்பந்தாட்டத்தை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்