பிரியதர்ஷனுக்கு நன்றி கூறிய “துரந்தர்” பட இயக்குனர்
‘துரந்தர்’ படத்தின் வெற்றியை கண்டு மகிழ்ந்த பிரியதர்ஷன், இயக்குனர் ஆதித்ய தாரை பாராட்டியுள்ளார்.;
பாலிவுட்டில் கடந்த மாதம் 5-ந் தேதி வெளியான ‘துரந்தர்’ திரைப்படம், ரூ.1,300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குனர், ஆதித்ய தார், தனது 2-வது படத்திலேயே ரூ.1,000 கோடி வசூல் இயக்குனர் பட்டியலில் இணைந்திருக்கிறார். இதனால் மார்ச் மாதம் வெளியாக உள்ள ‘துரந்தர் 2’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மலையாள இயக்குனர் பிரியதர்ஷனிடம் தான், ஆதித்ய தார் முதன்முதலில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதோடு பிரியதர்ஷன் இயக்கிய ‘ஆக்ரோஷ்', ‘தேஸ்' படங்களுக்கு வசனமும் எழுதி இருக்கிறார்.
இந்த நிலையில் ‘துரந்தர்’ படத்தின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்த பிரியதர்ஷன், “என்னிடம் பணியாற்றி, நல்ல குணாதிசயங்களுடன் தன்னை வளர்ந்துக்கொண்ட ஒருவரின், இப்படிப்பட்ட அற்புதமான வெற்றியை பார்ப்பதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது. ‘துரந்தர்’ படம் வெற்றி பெற்றதற்கும், ‘துரந்தர் 2’ வெற்றிபெறுவதற்கும் என்னுடைய வாழ்த்துகள் ஆதித்ய தார்” என்று பாராட்டியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஆதித்ய தார், “என்னுடைய அன்பு பிரியன் சார்.. நான் என்னுடைய கைகளில் வெறும் சில பேப்பர்களுடனும், கொஞ்சம் நம்பிக்கையுடனும் உங்கள் அருகில் நின்றபோது, என்னை முழுவதுமாக நம்பினீர்கள். எதை செய்யக்கூடாது என்று சினிமா உலகம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதை சரியாக செய்ய வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தது நீங்கள்தான். என்னுடைய திரைப் பயணத்தில் ஒவ்வொரு அடியையும், உங்கள் பாதங்களை பின்பற்றியே நகர்ந்துள்ளேன். நான் எப்போதும் உங்கள் மாணவன்தான். என் வெற்றி.. உங்கள் வெற்றியைப் போல” என்று குறிப்பிட்டுள்ளார்.