"லவ் மேரேஜ்" படக்குழுவுக்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பாராட்டு
அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ படம் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;
சென்னை,
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'கும்கி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு . அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான 'டாணாக்காரன், இறுகப்பற்று, சிகரம் தொடு, இவன் வேற மாதிரி' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
விக்ரம் பிரபு அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக 'லவ் மேரேஜ்' உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 27ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் 'லவ் மேரேஜ்' படக் குழுவினரை வாழ்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "லவ் மேரேஜ் திரைப்படம் சூப்பர். காமெடியிலும், உணர்வுபூர்வமான காட்சிகளிலும் விக்ரம் பிரபு சிறப்பாக நடித்திருந்தார். என்னை போன்ற 90'ஸ் கிட்ஸ்க்கு அந்த கதாபாத்திரம் மிகவும் ஒத்துபோகும். பிரியன் அருமையாக கதை எழுதி, அழகாக இயக்கியுள்ளார்.படத்தின் மிகப் பெரிய தூண் ஷான் ரோல்டன் தான். அனைவரும் நிச்சயம் திரையரங்கில் காண வேண்டிய படம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.