ஓட்டல் அதிபரிடம் மோசடி, மிரட்டல்: பிரபல டிவி நடிகை ராணி தலைமறைவு
சொகுசு காரை பயன்படுத்தி விட்டு தருவதாக தினேஷ் ராஜிடம், பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.;
சென்னை,
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த நடிகை ராணி (வயது 44). இவர் அலைகள் என்ற டிவி தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர். இதனால் அவர் அலைகள் ராணி என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். தொடர்ந்து அத்திப்பூக்கள், வள்ளி, குலதெய்வம், ரோஜா உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து ராணி பிரபலம் அடைந்தார்.
வள்ளி தொடரில் போலீஸ் கேரக்டரில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவரது கணவர் பாலாஜி என்கிற பால முருகன் (வயது 45) இந்தநிலையில், ராணி அவரது கணவர் பாலாஜி ஆகியோருக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரான தினேஷ் ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
தினேஷ்ராஜ் சொந்தமாக ஓட்டல் நடத்தி வந்தார். அதில் போதிய அளவு லாபம் இல்லை என கருதி அதனை குத்தகைக்கு விட திட்டமிட்டார். இதனையடுத்து ஓட்டலை ராணியின் கணவரான பாலாஜி ரூ.10 லட்சத்திற்க்கு குத்தகைக்கு எடுப்பதற்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது தினேஷ் ராஜுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை தனது மனைவிக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறி சில நாட்கள் இந்த காரை பயன்படுத்திவிட்டு தருவதாக தினேஷ் ராஜிடம், பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.
இதனை நம்பிய தினேஷ் ராஜ் தனது சொகுசு காரை பாலாஜியிடம் கொடுத்து அனுப்பினராம். அப்போது அந்த காரில் தினேஷ் ராஜுக்கு சொந்தமான ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வைர தோடும் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து தினேஷ் ராஜ் கார் மற்றும் வைர தோடு ஆகியவற்றை ஓப்படைக்குமாறு பாலாஜியிடம் கேட்டார். ஆனால் பாலாஜி அவற்றை மீண்டும் தினேஷ் ராஜிடம் ஒப்படைக்காமல் இருந்து வந்தார்.
இதனை தொடர்ந்து தினேஷ்ராஜ், நேரடியாக சென்னைக்கு சென்று கார் மற்றும் வைரத்தோட்டினை ஒப்படைக்குமாறு பாலாஜியிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி அவரது நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் தினேஷ் ராஜிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகை ராணி அவரது கணவர் பாலாஜி மற்றும் அவரது நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது தினேஷ் ராஜ் கரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொலை மிரட்டல், மோசடி, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் நேற்று புருஷோத்தமனை கரூருக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். நடிகை ராணி மற்றும் அவரது கணவர் பாலாஜி ஆகியோரையும் கரூருக்கு அழைத்து விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சொகுசு காருடன் நடிகை ராணி மற்றும் பாலாஜி தலைமறைவானதாக தெரிகிறது. அவர்களது சொல்போன் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
அவரது வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் ராணியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதன்பிறகே அவர் தலைமறைவானது போலீசாருக்கு தெரியவந்தது. இதைதொடர்ந்து கரூர் போலீஸ் நிலையத்தில் ராணி, பாலாஜி உள்ளிட்டோர் ஆஜர் ஆகுமாறு போலீசார் சம்மன் ஆணையை சென்னையில் உள்ள் அவரது வீட்டில் ஒட்டி விட்டு சென்றனர்.