`அனந்தா’ படத்தின் டிரைலரை வெளியிட்ட துர்கா ஸ்டாலின்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அனந்தா’ படத்தின் டிரெய்லரை துர்கா ஸ்டாலின் வெளியிட்டார்.;
சென்னை,
ரஜினிகாந்தை வைத்து பாட்ஷா, அண்ணாமலை, வீரா, பாபா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது ‘அனந்தா’ படத்தை இயக்கியுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அனந்தா’ படத்தில் சுகாசினி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடிகை சுகாசினி, பாடலாசிரியர் பா விஜய், பிக்பாஸ் அபிராமி, தலைவாசல் விஜய், பின்னணி பாடகர் மனோ, ஒய் ஜி மகேந்திரன், கலைப்புலி எஸ் தாணு, நிழல்கள் ரவி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து, நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்.