‘காந்தா’ படத்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.. குவியும் பாராட்டுகள்
‘காந்தா’ படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் ரசிகர்களின் வரவேற்பு மிகுதியாகவே இருக்கிறது.;
சென்னை,
ஸ்பிரிட் மீடியா சார்பில் ராணா மற்றும் வேபரர் பிலிம்ஸ் சார்பில் துல்கர் சல்மான் ஆகியோர் தயாரித்து செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள புதிய படம், 'காந்தா'. துல்கர் சல்மான் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ராணா, சமுத்திரகனி, ரவீந்திர விஜய், காயத்ரி சங்கர், நிழல்கள் ரவி, பக்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த 14-ந் தேதி உலகம் முழு வதும் திரைக்கு வந்து வெற்றி கரமாக ஒடிக்கொண்டிருக்கும் 'காந்தா' படம் குறித்து இயக்குனர் செல்வமணி செல்வராஜ் கூறியதாவது: சினிமா நடிகருக்கும், அவரை உருவாக்கிய இயக்குனருக்கும் இடையேயான 'ஈகோ'வை மையப்படுத்திய கதை தான் 'காந்தா'. இதில் ஏமாற்றம், அவமானம், கோபம், ஏக்கம், காதல் என எல்லா பரிமாணங்களிலும் பிரமிக்க வைக்கும் நடிப்பை காட்டி அசத்தியுள்ளார், துல்கர் சல்மான். காட்சிக்கு காட்சி அவரது நடிப்பு நேர்த்தி. அவருக்கு இணையாக நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார் பாக்யஸ்ரீ போர்ஸ். அழுகையில் வரும் அவரது அகோர சிரிப்பு மிரட்டல். சமுத்திர கனி, ராணாவின் நடிப்பும் பிரமிக்க வைக்கிறது. காயத்ரி சங்கர், நிழல்கள் ரவி, ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ், கஜேஷ் நாகேஷ் உள்ளிட்ட அனைவருமே குறைவில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். டானி சஞ்செஸ் லோபஸ் ஒளிப்பதிவும், ஜானு சந்தரின் இசையும் அந்தக் காலத்துக்கு கூட்டிச் செல்கிறது. இப்படி ஒட்டுமொத்த நடிகர் நடிகைகளின் நேர்த்தியான நடிப்பாலும், படக்குழுவினரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பினாலும் 'காந்தா' படம் இன்றைக்கு வெற்றிப்படமாக மாறியுள்ளது.
திரையிட்ட இடங்களிலெல்லாம் ரசிகர்களின் வரவேற்பு மிகுதியாகவே இருக்கிறது. ரிப்பீட் ஆடியன்ஸ் வருகையும் அதிகரித்துள்ளது. துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்சின் நடிப்புக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இந்த மாபெரும் வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், படம் பார்க்காத ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து ஆதரவுதரவும் வேண்டுகிறோம் என்று இயக்குனர் செல்வமணி செல்வராஜ் தெரிவித்தார்.