“மாண்புமிகு பறை” படத்தின் டிரெய்லர் வெளியானது
‘மாண்புமிகு பறை’ திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.;
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 2025ல் திரையிடப்பட்டது. அப்போது, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் படம், சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற கலாச்சார பாரம்பரியம் பிரிவில் விருதை பெற்றுள்ளது.
இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார், காயத்ரி ரெமா நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடைபெற்றது. எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பறை இசை குறித்தும், தமிழ் மண்ணின் அடையாளம் குறித்தும் இந்தப் படம் பேசுவது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வருகிற 12ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லரை நடிகரும், இயக்குனருமான சசிகுமார் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் படத்தின் மீதாக எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.