“காந்தாரா 2” படத்தால் இனி வில்லி கதாபாத்திரம்தான் கிடைக்குமென பயந்தேன் - ருக்மிணி வசந்த்
‘காந்தாரா 2’ திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடித்தது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்ததாக நடிகை ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்.;
‘காந்தாரா 2’ வெளியான பிறகு, ருக்மிணி வசந்தின் பெயர் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் அழகு மட்டுமல்ல நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பதும் ஆகும். அவர் ஒரு நட்சத்திர கதாநாயகியாக முத்திரை பதித்துள்ளார். காந்தாரா படத்தைப் பார்த்த அனைவரும் அவரை ‘நேஷனல் கிரஷ்’ என்று கூறி வருகின்றனர். புஷ்பா படத்திற்குப் பிறகு ராஷ்மிகா மந்தனாவுக்குக் கிடைத்த அதே அங்கீகாரம் ருக்மிணிக்கு தற்போது கிடைத்திருக்கிறது. இவர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா 2’ திரைப்படத்தில் 'கனகவதி' என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து ருக்மிணி கூறுகையில், “திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது. மக்கள் என்னை மென்மையான கதாபாத்திரங்களிலேயே பார்த்துப் பழகியதால், இந்த மாற்றம் என் எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்குமோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. இனி வாழ்நாள் முழுக்க வில்லி கதாபாத்திரம்தான் கிடைக்குமா என்றெல்லாம் தோன்றியது. 'நல்ல பெண்' பிம்பத்தைத் தாண்டி வெளியே வருவது சவாலாக இருந்தது. எனினும், படத்தின் ரிலீஸிக்கு பிறகு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் எனது பயத்தைப் போக்கின. ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டுவது எனக்கு நிம்மதி அளிக்கிறது” என்று ருக்மிணி தெரிவித்தார்.