தாத்தா, தந்தையின் பெயரை காப்பாற்றுவேன் - நாகேஷ் பேரன் நம்பிக்கை
தாத்தா, தந்தைபோல நானும் திரைத்துறையில் ஜொலிப்பேன் என்று கஜேஷ் கூறியுள்ளார்.;
நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த நாகேசின் மகன் ஆனந்த்பாபு சினிமாவின் முன்னணி நடிகராகவும், நடன கலைஞராகவும் திகழ்ந்தார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலக்கி வருகிறார்.
ஆனந்த்பாபுவின் மகன் கஜேஷ், தற்போது பத்மராஜூ ஜெய்சங்கர் தயாரித்து பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் 'உருட்டு உருட்டு' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ரித்விகா ஸ்ரேயா, அஸ்மிதா, ஹேமா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். பட விழாவில் ஆனந்த்பாபு பேசும்போது, 'என் தந்தைக்கும், எனக்கும் கொடுத்த ஆதரவை ரசிகர்கள் என் மகனுக்கும் கொடுக்கவேண்டும். ரசிகர்களை நம்பி அவனை சினிமாவில் ஒப்படைத்துள்ளேன்', என்றார்.
கஜேஷ் பேசுகையில், ''என் தாத்தா மற்றும் தந்தையின் பெயரை நிச்சயம் நான் காப்பாற்றுவேன். இருவரை போல நானும் திரைத்துறையில் ஜொலிப்பேன். இந்த சினிமாவுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று உறுதி தருகிறேன். அதிகம் பேசாமல் சாதிக்க விரும்புகிறேன்'' என்றார்.