போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர்- போலீசாரையும் தாக்கியதால் பரபரப்பு

விபத்து ஏற்படுத்தியது குறித்து கேள்வி கேட்டவர்களை நடிகர் சித்தார்த் பிரபு திட்டி தாக்க முயன்றார்.;

Update:2025-12-26 08:09 IST

கேரளாவைச் சேர்ந்த பிரபல டி.வி. நடிகர் சித்தார்த் பிரபு, மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை மற்றும் குடும்பக் கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர். அவர் தனியார் பாதுகாப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு, கோட்டயத்தில் இருந்து காரில் வந்துகொண்டிருந்த சித்தார்த் பிரபுவின் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நடந்துகொண்டிருந்த லாட்டரி விற்பனையாளர் ஒருவரின் மீது மோதியது. இதில் அந்த லாட்டரி வியாபாரி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு உடனடியாக பொதுமக்கள் திரண்டனர். தகவலறிந்த போலீசாரும் அங்கு விரைந்து வந்து, காயமடைந்த லாட்டரி வியாபாரியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய நடிகர் சித்தார்த் பிரபுவிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும், கேள்வி கேட்டவர்களை அவர் திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவரை தடுக்க முயன்ற போலீசாரையும் அவர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, நடிகர் சித்தார்த் பிரபுவை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்