"மிஸஸ் அண்ட் மிஸ்டர்" சினிமா விமர்சனம்

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-07-14 14:26 IST

சென்னை,

வனிதா இயக்கி, நடித்துள்ள புதிய படம் "மிஸஸ் அண்ட் மிஸ்டர்". 40 வயதை தாண்டிய ராபர்ட் - வனிதா தம்பதி பாங்காக்கில் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள். 'இனியும் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் அவ்வளவுதான்...' என சுற்றியுள்ளவர்கள் உசுப்பேற்ற, 'அம்மாவாகியே தீருவது' என உறுதி ஏற்கிறார், வனிதா.

'குழந்தை வேண்டாம்' என்று விடாப்பிடியாக இருக்கும் ராபர்ட்டை 'சொக்குப்பொடி' போட்டு மயக்கி, நினைத்ததை நடத்திட துடிக்கிறார். குழந்தை பேறு அடைவதற்கான வனிதாவின் முயற்சி பலித்ததா? குழந்தை வேண்டாம் என்று ராபர்ட் சொல்வது ஏன்? கடைசியில் என்ன ஆனது? என்பதே கதை.

வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில், தாய்மை ஏக்கத்துடன் தவிக்கும் வனிதாவின் நடிப்பு வியப்பை தருகிறது. 'கவர்ச்சி' என்ற பெயரில் பயமுறுத்தாமல் இருந்திருக்கலாம். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார், ராபர்ட். தெலுங்கு கலந்து பேசும் ஷகிலாவின் நடிப்பு 'ஓவர் ஆக்டிங்'.

கணேஷ், ஆர்த்தி, பாத்திமா பாபு, கும்தாஜ், வாசுகி, 'பவர்ஸ்டார்' சீனிவாசன், ஸ்ரீமன் என அனைவரும் ஓரளவு தங்கள் நடிப்பில் கவனிக்க வைத்துள்ளனர்.

சரிந்து போன தனது 'மார்க்கெட்' மீண்டும் உயராதா...? என்ற ஆசையில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள கிரணுக்கு ஏமாற்றம் தான். டி.ராஜபாண்டி ஒளிப்பதிவில் பாங்காக்கின் அழகு கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ஓகே ரகம்.

படத்தின் முதல் பாதி கலர்புல்லாக நகருகிறது. நல்ல கதை என்றாலும், சரியான திரைக்கதை அமையாதது பெரும் பலவீனம். ஆபாச அர்த்தம் தெறிக்கும் பல காட்சிகள் முகம் சுளிக்க வைக்கிறது. 40 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதினால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி அலசும் படமாக இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், வனிதா விஜயகுமார். இயக்குனராக மேற்கொண்ட மெனக்கெடுதலை நடிப்பிலும் காட்டியிருக்கலாம்.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் - 'ஆன்ட்டி'களின் அட்டகாசம்



 


Tags:    

மேலும் செய்திகள்