ரூ 50 கோடி வசூலை எட்டிய பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே”
பிரணவ் மோகன்லாலின் ‘டைஸ் ஐரே’ திரைப்படம் ரூ 50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;
மலையாள சினிமாவில் 'ரெட் ரெயின்' என்ற திரில்லர் படம் மூலமாக இயக்குனரானவர், ராகுல் சதாசிவன். இவரது இயக்கத்தில் மம்முட்டி நடித்து 2024-ம் ஆண்டு வெளியான 'பிரமயுகம்' திரைப்படங்கள், ஹாரர் வகையில் வித்தியாசமாக அமைந்திருந்தது. 'பிரமயுகம்' படத்தை தயாரித்த நிறுவனம், மீண்டும் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் ‘டைஸ் ஐரே’ படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப் மற்றும் அருண் அஜிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.
‘டைஸ் ஐரே’ என்தன் பொருள், “ஆன்மாக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு சொர்க்கம் அல்லது நரகத்திற்கு அனுப்பப்படும் இறுதித் தீர்ப்பு” என்பதாகும். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
நாயகன் பிரணவ் சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்களும் பேய்க்கதையுமாக உருவான இப்படம் கடந்த அக்டோபர் 31 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பும் கவனம் பெற்றதால் ஹாரர் தருணங்கள் ரசிகர்களிடம் பயத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில், ‘டைஸ் ஐரே’ வெளியான ஒரே வாரத்தில் ரூ. 50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.