சினேகா-பிரசன்னா திருமணத்திற்கு நான்தான் காரணம் - இயக்குனர் சேரன்

சேரனின்‘ஆட்டோகிராப்’ திரைப்படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 14ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.;

Update:2025-11-09 14:20 IST

சென்னை,

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராப்’. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் ஹீரோ சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார். ஆட்டோகிராப் வெளியான போது 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை பாடிய சித்ரா, எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர். இந்தப் படம், நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வருகிற 14-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படக்குழுவினரின் ரீ-யூனியன் நிகழ்வு சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவைச் சேர்ந்த பலரும் பங்கேற்றிருந்தனர்.

Advertising
Advertising

இதில் இயக்குனர் சேரன் பேசும்போது, “என்னுடைய படங்கள் எப்போதும் உணர்வு ரீதியில்தான் இருக்கும். என்னால் வணிக நோக்கத்தில் படம் இயக்கி இருக்க முடியும். அப்படி செய்திருந்தால் பெரிய வெற்றியைக் கொடுத்திருப்பேன். ஐந்து படங்கள் வரை பெரிய ஹீரோக்களுடன் செய்திருப்பேன். அதேநேரம் என்னை பலரும் மறந்திருப்பார்கள். ஆனால் இப்போது நான் படங்கள் பெரிதாக இயக்கவில்லை என்றாலும், அனைவரின் நினைவிலும் இருக்கிறேன். அதைத்தான் என்னுடைய வெற்றியாகப் பார்க்கிறேன்.

சினேகாவுக்கும் எனக்குமான நட்பு இன்று வரை தொடர்கிறது. பிரசன்னாவும் என் நண்பர். பிரசன்னா- சினேகாவின் திருமணத்திற்கு நான்தான் காரணம். அவர்கள் சில பிரச்சினைகளால் திருமணத்தை தள்ளிபோட்ட போது, ‘பிரச்சினைக்காக திருமணத்தை தள்ளிப்போட்டால், திருமணமே பிரச்சினையாகிவிடும்' என்று கூறினேன். ‘ஆட்டோகிராப்' படத்தை இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையில் மெருகேற்றி இருக்கிறேன்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்