"தலைவன் தலைவி" சினிமா விமர்சனம்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-07-25 20:56 IST

குடும்பத்துடன் ஓட்டல் நடத்தி வரும் விஜய் சேதுபதியை, பெற்றோர் எதிர்ப்பை மீறி கரம்பிடிக்கிறார், நித்யாமேனன். ஒருகட்டத்தில் ஓட்டலின் கல்லா பெட்டியில் நித்யாமேனன் அமர, விஜய் சேதுபதியின் தாய் தீபாவுக்கும், தங்கை ரோஷிணிக்கும் முட்டல்-மோதல் ஏற்படுகிறது. இதனால் விஜய் சேதுபதி - நித்யாமேனன் இடையே சண்டை வெடிக்கிறது. இதற்கிடையில் இருவருக்கும் பெண் குழந்தையும் பிறக்கிறது.

ஒருகட்டத்தில் விஜய் சேதுபதிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக அறியும் நித்யாமேனன், சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்றுவிடுகிறார். மனைவி பிரிவால் விஜய் சேதுபதியும் வாடுகிறார். இதற்கிடையில் குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்வு குலதெய்வம் கோவிலில் நடக்கிறது. 'தனக்கு தெரியாமல் நடப்பதா...' என ஆத்திரத்துடன் கோவிலுக்கு செல்கிறார், விஜய் சேதுபதி. அதன்பிறகு என்ன நடந்தது? இருவரும் இணைந்தார்களா அல்லது பிரிந்தார்களா? என்பதே மீதி கதை.

அலட்டல் இல்லாத விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பாராட்டுகள் தரலாம். ஆனால் ஒரே பாணியிலான நடிப்பு வேண்டாமே... கொஞ்சம் மாற்றுங்கள் பாஸ். ஜாடிக்கு ஏற்ற மூடி போல, பக்காவாக பொருந்தியுள்ளார் நித்யாமேனன். நடிப்பில் மீண்டும் 'ஸ்கோர்' செய்துள்ளார்.

தீபா, செம்பன் வினோத், ரோஷிணி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே.சுரேஷ், ரோஹன், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்ட்ராயன் என அனைவரும் மனதில் நிற்கிறார்கள். யோகிபாபுவின் காமெடி ஓரளவு எடுபட்டுள்ளது. 

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க முடிகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை ஆறுதல் தந்தாலும், 'பொட்டல முட்டாயே...' பாடல் தவிர மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.

கணவன் - மனைவி சண்டை ரசிக்க வைத்தாலும், ஒருகட்டத்துக்கு மேல் 'என்னடா இது' என்று எண்ண தோன்றுகிறது. சில காட்சிகளையும் யூகிக்க முடிகிறது. படம் முழுக்க கத்திக்கொண்டே இருந்தால் எப்படி?

'கணவன் - மனைவி சண்டையில் சொந்தக்காரர்கள் யாரும் வராமல் இருந்தாலே போதும்', என்ற கருத்தை ஆழ சொல்லி, நகைச்சுவை ததும்ப கதையில் பயணிக்க வைத்துள்ளார், இயக்குனர் பாண்டிராஜ்.

தலைவன் தலைவி - போதுமடா சாமி.

Tags:    

மேலும் செய்திகள்