பராசக்தி விளம்பரத்திற்கு சிவாஜி பெயரை பயன்படுத்துவதா? சிவகார்த்தியேகனுக்கு கிளம்பிய எதிர்ப்பு

சிவாஜியின் பெயரையும், புகைப்படத்தையும் தங்களுடைய வணிக நோக்கத்திற்காக, சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதை நடிகர் திலகத்தின் ஆன்மா மன்னிக்காது என்று தெரிவித்தனர்.;

Update:2026-01-01 18:33 IST

சென்னை,

சிவகார்த்திகேயேன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வரும் 10 ஆம் தேதிக்கு திரைக்கு வர உள்ளது. விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் மோதுவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பட வெளியீட்டை முன்னிட்டு பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விளம்பரங்களை செய்து வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதனிடையே, பராசக்தி படத்தின் விளம்பரங்களில் சிவாஜி படத்தை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952-ல் புரட்டிப்போட்ட பராசக்தி திரைப்படத்தின் பெயரை மீண்டும் அதே பெயரில் தயாரிப்பதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.

ஆனால், ரசிகர்களின் வேண்டுகோள் மற்றும் எதிர்ப்பைப் புறந்தள்ளி மீண்டும் அதே பெயரிலேயே (பராசக்தி) திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவரவிருக்கிறது. வேதனையிலிருக்கும் எங்களுக்கு, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல, நேற்று ஒரு தொலைக்காட்சியில், தீ பரவட்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடமிருந்து தீப்பந்தத்தை சிவகார்த்திகேயன் பெறுவதுபோல பராசக்தி திரைப்படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

நடிகர் திலகத்தின் வாரிசுகளாக பிரபு, மூன்றாம் தலைமுறையாக விக்ரம் பிரபு ஆகியோர் இன்றளவிலும் தமிழ்த் திரையுலகில் தடம்பதித்து சென்று கொண்டிருக்கையில், சிவகார்த்திகேயனுக்கு நடிகர் திலகத்தின் வாரிசு என்ற ரீதியில் விளம்பரப்படுத்திக்கொள்ள யார் அதிகாரம், அனுமதி கொடுத்தது? நேர்மையைக் காற்றில் பறக்கவிட்டு, அடுத்தவர் உழைப்பில், அடுத்தவர் பெயரில் குளிர்காய்ந்து, எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்று திரையுலகில் திரியும் கூட்டத்தில் ஒருவராக, இன்று சிவகார்த்திகேயனும், மனசாட்சி தேவையில்லை, பணம் மட்டும் போதும் என்ற நிலையில் பராசக்தி திரைக்குழுவும் உள்ளது.

ஒரு யுகக் கலைஞனாக கலை உலகின் தவப்புதல்வனாக கலைஞர் கருணாநிதி அவர்களின் புரட்சிகர வசனங்களை தனது உணர்ச்சிகர நடிப்பால் தமிழினத்திடம் கொண்டுசேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தமிழ்த் திரையுலகம் கலையின் கொடையாக உலகிற்குத் தந்த திரைப்படம் தான் "பராசக்தி". அந்தப் பெயரை அபகரித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர்திலகத்தின் பெயரையும், புகைப்படத்தையும் தங்களுடைய வணிக நோக்கத்திற்காக, சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதை நடிகர் திலகத்தின் ஆன்மா மன்னிக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்