தனுஷின் “தேரே இஷக் மெய்ன்” - சினிமா விமர்சனம்
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தேரே இஷக் மெய்ன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
இந்திய விமானப்படை வீரராக இருக்கும் தனுஷ் கோபக்காரராக இருக்கிறார். தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் பேச்சையும் கேட்காமல் தன் மனதிற்கு சரி என பட்டதை செய்கிறார். ஆனால், இந்திய விமானப்படை சார்பில் தனுஷின் கோபத்தை கட்டுப்படுத்தி, ஒழுக்கமாக பணியாற்ற வேண்டும் என சைக்காலஜி மருத்துவரிடம் கவுசிலிங் எடுக்க உத்தரவிடப்படுகிறது.
தனுஷுக்கு கவுன்சிலிங் கொடுக்க வருகிறார் கதாநாயகி க்ரித்தி சனோன். இருவரும் சந்திக்கின்றனர். ஒரு பக்கம் கிரித்தி சனோன் தனது ஆய்வறிக்கை மூலம் வன்முறையான மனிதனை சராசரி மனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார். இதற்காக, தனுஷிடம் பழகுகிறார். தனுஷை மாற்றிவிட்டால் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என நினைக்கிறார். ஆனால், தனுஷுக்கு கிரித்தி மீது காதல் மலர, கிரித்தியோ நீ வேண்டுமானால் காதலித்துக் கொள், நான் அப்படி பார்க்கவில்லை என்கிறார். ஆனால், காலங்கள் கடக்க இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
இருந்தாலும், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார். அப்போது, தனுஷை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு வரும்படி சவால் விடுகிறார். அதன்பிறகு, தனுஷ் சவாலில் ஜெயிக்கிறாரா? கிரித்தியை கரம் பிடிக்கிறாரா? என்பது படத்தின் மீதிக்கதை..
சங்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் மிரட்டியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ராஞ்சனாவை நினைவுப்படுத்துகிறார். கிரித்தி சனோன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிரித்தியின் தந்தையாக நடித்துள்ள பிரகாஷ்ராஜ் கண் கலங்கவைத்துவிட்டார்.
ராஞ்சனா படத்தை போல் இப்படத்திலும் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது வழக்கமான காதல் கதையில் பட்டையை கிளப்பியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்க வைத்திருக்கிறார். அதுவே படத்தின் வெற்றி.
படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு உயிர்.