ஒண்டிமுனியும் நல்ல பாடனும் - சினிமா விமர்சனம்
கதாபாத்திரத்தில் அழுத்தம் நிறைந்த நடிப்பை காட்டி பரோட்டா முருகேசன் அசத்தியுள்ளார்.;
சிறு வயதில் கிணற்றில் விழுந்த தனது மகன் உயிருக்கு போராடும் சூழலில், மகன் உயிரை காப்பாற்றி தந்தால் கிடா பலியிட்டு வணங்குவதாக தனது குலதெய்வம் ஒண்டிமுனியனிடம் வேண்டிக் கொள்கிறார் பரோட்டா முருகேசன்.
மகன் உயிர் தப்பித்து விட, ஒரு குட்டி கிடா வாங்கி பத்திரமாக வளர்த்து வருகிறார். பரோட்டா முருகேசன். ஆண்டுகள் கடந்தாலும் அவரது வேண்டுதல் மட்டும் நிறைவேறாமல் இருக்கிறது.
இரண்டு பண்ணையார்கள் இடையேயான மோதல் காரணமாக அந்த ஊர் கோவில் திருவிழா நடைபெறாமல் இருக்கிறது. இதனால் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து தனது வேண்டுதலை எப்படியாவது நிறைவேற்ற துடிக்கிறார் பரோட்டா முருகேசன்.
ஒரு கட்டத்தில் பரோட்டா முருகேசனின் மகன் தான் ஆசைப்பட்ட மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக அந்த கிடாவை விற்கத் துணிகிறார். பரோட்டா முருகேசன் நினைத்தபடி தனது வேண்டுதலை நிறைவேற்றினாரா? அல்லது சூழ்நிலை கைதியாகி போனாரா? என்பது பரபரப்பான மீதி கதை.
நல்ல பாடன் என்ற கதாபாத்திரத்தில் அழுத்தம் நிறைந்த நடிப்பை காட்டி அசத்தியுள்ளார் பரோட்டா முருகேசன். இதுபோன்ற கதாபாத்திரங்களை பார்த்து நாளாச்சு என்று சொல்லும் விதமாக உணர்வான நடிப்பால் கலங்கடித்து இருக்கிறார். நிச்சயம் விருதுகள் கிடைக்கலாம்.
பரோட்டா முருகேசனின் மகளாக வரும் சித்ரா நாகராஜன், மகனாக வரும் விஜயன், மருமகன் விஜய் சேனாதிபதி மேலும் வித்தியா உள்ளிட்ட நடித்த அத்தனை பேருமே இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஜே.டி.விமலின் ஒளிப்பதிவில் கிராமத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு தோன்றுகிறது. நடராஜன் சங்கரனின் இசை கவனிக்க வைக்கிறது. ஒண்டிமுனி கோவிலில் நடக்கும் விஷயங்கள், திருவிழாவிற்காக ஏங்கும் மக்கள் என உணர்ச்சிபூர்வமான காட்சிகள் படத்தின் பலம். சில இடங்களில் கதை மெதுவாக நகர்கிறது.
ஒரு எதார்த்த நிகழ்வை கிராமத்து வாழ்வியலுடன் கதையாக சொல்லி அனைத்து தரப்பினரையும் ரசிக்கும்படி செய்துள்ளார் இயக்குனர் சுகவனம்.
ஒண்டிமுனியும் நல்ல பாடனும் - எதார்த்த நிகழ்வுகளின் பெட்டகம்