இப்படிக்கு தேவதை

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

Update: 2022-07-31 01:30 GMT

1. நான் சிறுவயதில் இருந்தே வறுமையை அனுபவித்து வளர்ந்தவள். பல நல்ல உள்ளங்கள் செய்த உதவியால் கல்வி கற்று, தற்போது நல்ல முறையில் வாழ்ந்து வருகிறேன். எனது உறவுக்கார பெண்மணி எங்கள் குடும்பத்துக்கு பல உதவிகள் செய்தார். எனக்கு அவரிடம் மரியாதையும், நன்றி உணர்வும் இருக்கிறது. ஆனால், எப்போதோ எனது பெற்றோருக்கும், அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எங்களுக்கு இடையே தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு என்னாலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமீப காலமாக உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் அவரை சந்திக்க நேரும்போதெல்லாம், அவருடன் பேச முற்படுகிறேன். ஆனால் அவர் என்னைப் பார்த்தாலே எரிச்சலுடன் நகர்ந்து செல்கிறார். இத்தகைய நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்.

உங்கள் பெற்றோருக்கும், உறவுக்கார பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அவர் மனதால் மிகவும் காயமடைந்து இருக்கலாம். இத்தனை வருடங்களாக நீங்கள் அவரைத் தொடர்பு கொள்ளாததால் அவர் வருத்தப்பட்டிருக்கலாம். அவர் செய்த உதவிக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பது, அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே குறுஞ்செய்தி அல்லது

கடிதம் மூலம் அவருக்கு உங்கள் நன்றியையும், இத்தனை நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கு வருத்தத்தையும் தெரிவியுங்கள். மன்னிப்பு கேளுங்கள். அவரது மனக்காயத்தை ஆற்றுவதற்கு, நீங்கள் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேளுங்கள். அதற்கு பின்பும் அவர் உங்களை புறக்கணித்தால், காத்திருங்கள். காலம் அனைத்து காயங்களையும் ஆற்றும்.



2. நான், என் பெற்றோரின் விருப்பப்படி அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து, ஒரு வருடம் ஆகப் போகிறது. என் கணவருக்கு குடிப்பழக்கம், போதை பழக்கம், மற்ற பெண்களுடன் தொடர்பு, திருட்டு, பொய் என எல்லா கெட்ட பழக்கமும் இருக்கிறது என்பது, திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது. அதிர்ச்சி அடைந்தாலும், 'அவர் திருந்தி விடுவார்' என்றுநம்பினேன். இப்போது என் பெற்றோருக்கு விஷயம் தெரிந்து 'அவருடன் வாழ வேண்டாம்' என்று விவாகரத்து செய்ய சொல்கிறார்கள். நான் கர்ப்படைந்து சில நாட்களுக்குள் கருச்சிதைவு ஏற்பட்டது. அதனால் தற்போது பெற்றோர் வீட்டில் இருக்கிறேன். பெற்றோர், 'கணவர் வீட்டுக்கு திரும்பவும் போக வேண்டாம்' என்கிறார்கள். எனக்கோ 'அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம்' என்று தோன்றுகிறது. எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்.

உங்கள் கணவருக்கு இருக்கும் பழக்கவழக்கங்களையும், ஆளுமையையும் கருத்தில் கொண்டு பார்த்தால், நீங்கள் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுப்பதால் மட்டும் அவர் திருந்த போவது இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள பழக்கவழக்கங்களை உங்கள் கணவர் தொடர்ந்து கொண்டிருந்தால், உங்கள் திருமண வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை. எனவே உங்கள் பெற்றோரின் துணையுடன், தகுந்த மனநல ஆலோசகரிடம் நீங்கள் ஆலோசனை பெறுவது, நிலைமையைப் புரிந்துகொண்டு நல்ல முடிவு எடுப்பதற்கு உங்களுக்கு உதவும். இது ஒரு கடினமான முடிவுதான் என்றாலும், வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வது நல்லது இல்லை.

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in


 

Tags:    

மேலும் செய்திகள்