இப்படிக்கு தேவதை

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.;

Update:2022-10-23 07:00 IST

1. நான் 4 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் எனது தூரத்து உறவினர். எங்கள் காதலுக்கு எனது குடும்பத்தில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காதலரின் தம்பி தீவிரமான போதைப் பழக்கத்துக்கு ஆளானவர். அதன் காரணமாக காவல் துறையிலும் சிக்கி இருக்கிறார். இதை அறிந்த எனது பெற்றோர், காதலை கைவிடுமாறு என்னை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்.

உங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காதலருடைய தம்பியின் போதை பழக்கம் மட்டுமே காரணமா? காதலரை திருமணம் செய்துகொண்டால் அவருடன் உங்கள் வாழ்க்கை நல்ல முறையில் அமையும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? அவருக்கு நிலையான வேலை இருக்கிறதா? அவர் கல்வித் தகுதி உள்ளவரா? தனது சகோதரனிடம் அவருடைய அணுகுமுறை என்ன? போதைப் பழக்கத்தில் இருந்து சகோதரனை சீர்திருத்த அவர் என்ன முயற்சிகளை எடுத்தார்? ஒருவேளை அவர் முயற்சி எடுத்து அவற்றால் எந்த பலனும் இல்லை என்றால், தனது சகோதரருடனான உறவைப் பற்றி அவர் எத்தகைய முடிவை எடுப்பார்? இதில் அவர் தெளிவான முடிவை எடுக்கவில்லை என்றால், அவருடன் இணையும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல பிரச்சினைகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். அவர் மீதான காதல் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுக்க உங்களைத் தூண்டும் முன்பு, மேற்கண்ட விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் யோசித்து நல்ல முடிவு எடுங்கள்.

2. என்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை அனைவருக்கும் பிடித்துப்போனது. அவர் என்னை அடிக்கடி சந்தித்து பேசி உறவை வளர்த்து வந்தார். திடீரென இரு வீட்டாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், எனது பெற்றோர் வேறு ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். என்னால் அவரை மறக்க முடியவில்லை. எனக்கு நல்வழி சொல்லுங்கள்.

முந்தைய நபருடனான உறவு முறிவின் காயங்களில் இருந்து நீங்கள் குணமடைவதற்கு முன்பே, உங்கள் திருமணம் நடந்திருக்கிறது. அவரை கைப்பிடித்திருந்தால் வாழ்க்கை நல்லபடியாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உங்கள் நினைப்பே தவிர, உண்மை இல்லை. ஆசை சிந்தனையில் மூளை செய்யும் கற்பனை மட்டுமே. இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தருணமும், உங்கள் திருமணமும் மட்டுமே உண்மை. உங்கள் கற்பனையால் வாழ்க்கைக்கு தீர்வு கிடைக்காது. எனவே நிஜத்துக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்க்கையை நல்ல முறையில் வாழுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர். 

Tags:    

மேலும் செய்திகள்