பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான முன்னேற்பாடு தீவிரம்
ராசிபுரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் உமா ஆலோசனை நடத்தினார்.;
ரூ.1,000 உரிமைத்தொகை
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள கலைஞர் உரிமைத் திட்ட விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் உமா தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் கட்ட முகாம், இரண்டாம் கட்ட முகாம் மற்றும் சிறப்பு முகாம்கள் ஆகியவற்றின் மூலம் 3,82,666 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 1,11,396 விண்ணப்பங்கள் களஆய்வு மேற்கொள்ள வரப்பெற்றது.
விண்ணப்பங்கள் களஆய்வு
வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் ரேஷன்கடை விற்பனையாளர்கள் மூலம் கலந்தாய்வுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் களஆய்வு செய்யப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
அன்றையதினமே நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இத்திட்டத்தின் தொடக்க விழாவில் எம்.பி.க்கள் ராஜேஸ்குமார், சின்ராஜ் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு ரூபே கார்டுகளை வழங்க உள்ளார். எனவே தேவையான குடிநீர், மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன், கூட்டுறவு சங்கங்கள் (இணைபதிவாளர்) செல்வகுமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், ராசிபுரம் தாசில்தார் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.